சென்னையைச் சேர்ந்த 12 வயது கிராண்ட் மாஸ்டர் சிறுவன் பிரக்ஞானந்தா இன்று வீடு திரும்பினார்.
சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் பாபு. இவரது 12 வயது மகன் பிரக்ஞானந்தாதான் உலகிலேயே இரண்டாவது இளமையான கிராண்ட் மாஸ்டர். இவர் இத்தாலியில் நடைபெற்ற கிரெடைன் ஓபன் செஸ் போட்டியில் கலந்துகொண்டு இந்தப் பட்டத்தைப் பெற்றுள்ளார்.
பிரக்ஞானந்தா இளம் வயதில் இருந்தே செஸ் விளையாட்டில் அதீத ஆர்வம் கொண்டிருந்ததால், அவரது பெற்றோரின் ஊக்கத்துடன் தொடர்ந்து செஸ் விளையாடி வருகிறார். இத்தாலியில் நடைபெற்ற கிராண்ட் மாஸ்டர் இறுதிப்போட்டியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட கிராண்ட் மாஸ்டர் ரியோலாண்ட் புரூஸர்ஸை பிரக்ஞானந்தா வீழ்த்தி வெற்றிபெற்றார். வெறும் 12 ஆண்டுகள் 10 மாதங்களே நிரம்பிய இவருக்கு இது மூன்றாவது கிராண்ட் மாஸ்டர் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. பிரக்ஞானந்தா தனது முதல் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம்தான் பெற்றிருந்தார். இந்நிலையில், இத்தாலி செஸ் போட்டியில் கலந்துகொண்ட பிரக்ஞானந்தா இன்று சென்னை திரும்பினார். அவருக்கு பெற்றோர், ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
உக்ரைன் நாட்டின் செர்ஜீ கர்ஜாக்கின்தான் உலகின் இளம் கிராண்ட் மாஸ்டராக நீடித்து வருகிறார். 2002 ஆம் ஆண்டு அவர் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வெல்லும்போது, அவரது வயது 12 ஆண்டுகள் 7 மாதம் மட்டுமே.