பல்வேறு மருத்துவ முறைகளை உள்ளடக்கிய நாடான இந்தியாவில் அந்த மருத்துவங்களுக்கு இடையிலான போட்டி நீண்டகாலமாக இருந்து வருகிறது. நாம் அதிகமாக உபயோகிப்பது அலோபதி மருத்துவ முறைதான் என்றாலும், சித்த மருத்துவம் குறித்த தேடலும் இங்கு அதிகம் இருக்கிறது. இந்த மருத்துவ முறைகளுக்கு இடையிலான வித்தியாசங்கள் பற்றி நமக்கு விளக்குகிறார் டாக்டர் அருணாச்சலம்
சித்த மருத்துவம் என்பது நம்பிக்கை சார்ந்தது. கிருமிகளுக்கு சித்த மருத்துவத்தில், ஆயுர்வேத மருத்துவத்தில் மருந்துகள் கிடையாது என்பது தான் உண்மை. கிருமிகளை நவீன மருத்துவத்தின் மூலமாகத் தான் கட்டுப்படுத்த முடியும். நவீன மருத்துவம் என்பது டிவி, கம்ப்யூட்டர், செல்போன் போன்றது. இதை யார் கண்டுபிடித்தார்கள் என்பதெல்லாம் பிரச்சனை இல்லை. இவை அனைவருக்குமே பொதுவானவை. பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
மாற்று மருத்துவத்திற்கு செல்பவர்கள் மோசமான விளைவுகளோடு மீண்டும் எங்களிடம் வருவது தான் அதிகம் நிகழ்கிறது. நவீன மருத்துவத்தில் மட்டும் தான் மருந்துகள் இருக்கின்றன. மற்ற அனைத்துமே உணவு முறைகள் தான். சர்க்கரை நோயாளிகள், இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் அளவு மாற்றம் ஏற்படும்போது மாற்று மருத்துவங்களை விட்டுவிட்டு மீண்டும் நவீன மருத்துவத்திற்கு வருவார்கள். மாதம் ஒருமுறை இரத்தக் கொதிப்பை பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
சரியான நடைமுறைகளைப் பின்பற்றாதவர்களுக்கு தன்னம்பிக்கையை விட பயம் தான் அதிகம் ஏற்படும். சர்க்கரை அளவில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டால் மயக்கம் ஏற்படும். உப்பு, ஊறுகாய் ஆகிய இரண்டும் இரத்தக் கொதிப்பிற்கு எதிரிகள். பைவ் ஸ்டார் ஹோட்டல்களில் கூட உப்பு அதிகம் சேர்த்த உணவைத் தான் பரிமாறுகிறார்கள். கொஞ்சம் இனிப்பு அதிகம் சேர்த்தால் கூட சர்க்கரை அளவு கூடிவிடும். இதை நடப்பதன் மூலம் சரிப்படுத்தலாம். அனுபவம் இல்லாமல் தாமாக மருந்துகள் எடுத்துக்கொள்வது தவறு. மருத்துவரின் ஆலோசனைகள் எப்போதும் வேண்டும்.