மிக நெடியதான மனிதகுல வரலாற்றில், மனிதர்கள் எப்போது உடை அணியத் தொடங்கினார்கள் என்பதை மட்டும் நிச்சயமாக அறியமுடியவில்லை. மனித இனத்தின் பரிணாம வளர்ச்சிக்கு ஆதாரமாக எலும்புக்கூடுகள் கிடைக்கின்றன. அவர்களுடைய நாகரிக வளர்ச்சிக்கு ஆதாரமாக குகைச்சித்திரங்களும் எழுத்துக்களும் கிடைக்கின்றன. ஆனால், மனிதர்கள் உடை அணிந்த காலத்தை நிர்ணயிக்க போதுமான படிமங்கள் கிடைக்கவேயில்லை. கிடைப்பதற்கான வாய்ப்புகளும் இல்லை.
ஏனென்றால், மனிதன் முதலில் உடல் வெதுவெதுப்புக்காக விலங்குகளின்தோலைப் போர்த்தியிருக்கலாம். அதற்கான ஆதாரங்கள் நியாண்டர்தால் என்ற இடத்தில் கிடைக்கின்றன. புதைக்கப்பட்ட ஒரு நியாண்டர்தால் மனிதனின்எலும்புக்கூடு அருகே சிறுத்தையின் இடது பாதத்தின் எலும்பும், வால்பகுதி எலும்பும் கிடைத்திருக்கின்றன. மனிதனின் எலும்பை விட சிறுத்தையின் எலும்பு எளிதில் இற்றுப்போகும்தன்மை கொண்டது. அதேசமயம், அதன் பாத எலும்புகளும், வால்பகுதி எலும்பும் சற்று கடினத்தன்மை வாய்ந்தவையாக இருக்கின்றன. எனவே, புதைக்கப்பட்ட நியாண்டர்தால் மனிதன் மீது சிறுத்தையின் தோலை போர்த்தியிருக்கலாம் என்று மானுடவியல் நிபுணர்கள் கருதுகின்றனர். எனினும், இதற்கான கால அளவை துல்லியமாக மதிப்பிட முடியவில்லை.
72 ஆயிரம் ஆண்டுகளில் இருந்து 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு இடைப்பட்டகாலத்தில், விலங்குகளின் தோலை மனிதன் உபயோகப் படுத்தியிருக்கலாம் என்று மானுடவியல் நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். வினோதமான ஒரு ஆய்வின் அடிப்படையில்தான் அவர்கள் இந்த மதிப்பீட்டுக்குவந்தார்கள் என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம். ஜெர்மனியில் மேக்ஸ் பிளாங்க் மானுடவியல் பரிணாம ஆய்வு நிறுவனம்இருக்கிறது. இதில் பேராசிரியராக பணிபுரியும் மார்க் ஸ்டோன்கிங் என்பவர் தலைமையிலான குழு இந்த ஆய்வை நடத்தியது. அது என்ன ஆய்வு? சீலைப் பேன்கள் எப்போது உருவாகின என்ற ஆய்வு.
ஆம், முடியிலும் தலையிலும் வாழும் பேன்கள் தலைப் பேன்கள் என்று அழைக்கப்படுகின்றன. உடலின் வழவழப்பான பகுதியில் வசிப்பவற்றை சீலைப் பேன்கள் என்றுஅழைக்கிறார்கள். இவை மனிதர்களின் உடையில்தான் முட்டையிடும். மனிதர்கள் உடையணியத் தொடங்கிய பின்னர்தான் இந்த சீலைப் பேன்கள் உருவாகி இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஸ்டோன்கிங் குழுவினர் ஆய்வை நடத்தினர். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெறப்பட்ட 40 தலைப் பேன்கள், சீலைப்பேன்களின் மரபணு சிதைவை ஸ்டோன்கிங் குழு ஆய்வு செய்தது. சிம்பன்ஸிகளிடம் பெறப்பட்ட பேன்களையும் ஆய்வு செய்தனர்.
தலைப் பேன்களுக்கும் சீலைப் பேன்களுக்கும் இடையிலான மரபணு வித்தியாசங்களை அவர்கள் கவனமாக கணக்கிட்டனர். இறுதியில் சீலைப் பேன்கள் உருவான காலம் சுமாராக 72 ஆயிரம் ஆண்டுகளில் இருந்து 42 ஆயிரம் ஆண்டுகளுக்கு இடைப்பட்டது என்ற முடிவுக்கு வந்தனர். உடையைத் தைக்க உதவும் ஊசியை 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் பயன்படுத்தியதற்கான ஆதாரம் ஏற்கெனவே கிடைத்திருக்கிறது. எனவே, மனிதர்கள் 42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உடையணியத் தொடங்கியிருக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர். இந்த ஆய்வு மிகவும் புத்திசாலித்தனமானது என்று பெனிசில்வேனியா பல்கலைக்கழக உயிரியல் பேராசிரியர் பிளைர் ஹெட்ஜெஸ் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறத் தொடங்கிய ஹோமோ ஸாபியென்ஸ் ஸாபியென்ஸ் இன மனிதர்கள் பூமியின்அனைத்துக் கண்டங்களுக்கும் பரவினர். பெரிங் நீரிணை வழியாக அமெரிக்க கண்டத்திற்குள்ளும், தெற்கு ஆசியா வழியாக இந்தோனேசியா, ஆஸ்திரேலியா ஆகிய தீவுகளுக்கும் சென்று குடியேறினர். கி.மு.32 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ ஸாபியென்ஸ் ஸாபியென்ஸ் இன மனிதர்கள் மிகப்பெரிய அபாயத்தை சந்திக்க நேர்ந்தது.
நான்கில் மூன்று பங்கு பூமி பனிக்கட்டியாக உறைந்ததுதான் இதற்கு காரணம். பூமியின் 460 கோடி வரலாற்றில், அது, 11 முறை பனிக்கட்டியாய் உறைந்து பின் உருகியிருக்கிறது. கடைசிப் பனிக்கட்டிக் காலம் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தொடங்கியதாக விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர். தொடக்கத்தில் பூமியில் மழைப் பொழிவு இல்லை. இப்போது இருப்பது போன்ற சீரான தட்பவெப்ப நிலை இல்லை. காற்றில் கார்பன் டை ஆக்ஸைடு போதுமான அளவுக்கு இல்லை. எனவே, நீர் ஆவியாகி பின் மழை பொழியும்நிலை இல்லை. பனி மட்டுமே பொழியும். ஆப்பிரிக்காவில் மட்டுமே ஓரளவு தட்பவெப்ப நிலை சீராக இருந்தது. எனவேதான் மனித இனம் அங்கு படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்றது. இயற்கை வளம் போதுமான அளவுக்கு இல்லாததால், அவர்கள் இடம்விட்டு இடம் மாறிக்கொண்டே இருந்தனர்.
கி.மு.30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், பூமியின் கடல் பிரதேசம் மட்டுமின்றி, நிலப்பகுதியில் மூன்றில் ஒரு பங்கும் பனிக்கட்டியாக உறைந்தது. வனங்கள் அழிந்தன. புல் தரையை பார்க்க முடியவில்லை. வறண்ட புதர்கள் மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைத்திருந்தன. விலங்குகளும்கூட வித்தியாசமாக இருந்தன. மயிர் அடர்ந்த மம்மூத் என்ற யானைகள், மயிர் அடர்ந்த குகைக்கரடிகள், மயிர் அடர்ந்த ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம், மயிர் அடர்ந்த ஓநாய்கள், பெரிய கொம்புகளுடன் கூடிய கலைமான்கள், குதிரைகள், காட்டெருமைகள் மட்டுமே உலவின. உணவு கிடைக்காமல் பனியில் சிக்கிய மம்மூத்தை, உணவுக்காக அலைந்த மனிதர்கள் சூழ்ந்து கொன்றனர். அதை பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி உணவாக உண்டனர். அந்த மிருகங்களின் படத்தை தாங்கள் வசித்த குகைகளின் சுவர்களில் அவர்கள் வரைந்து வைத்திருக்கின்றனர்.
இயற்கை உணவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. உணவுக்காக இயற்கையை மட்டுமே நம்பியிருந்த அவர்கள் கடும் நெருக்கடியில் சிக்கிக் கொண்டனர். மனித இனம் எண்ணிக்கையில் பெருகி வந்த நிலையில், உணவுத் தேவை அதிகரித்தது. அத்தனை பேருக்கும் தேவையான உணவு கிடைக்கவில்லை. பிழைப்பைத் தேடி இப்போது நாம் அலைவதைப் போல, உணவைத் தேடியே அவர்கள் பூமியின் பல பாகங்களுக்கும் இடம் பெயர்ந்தனர். கடல்நீர் உறைந்ததால், தரைப்பகுதி விரிவாகியது. அதைப் பயன்படுத்தி கடல் நடுவே உள்ள தீவுகளுக்குக் கூட மனிதர்கள் செல்ல முடிந்தது.
உக்ரைன், செர்பியா, மாசிடோனியா ஆகிய பகுதிகளில் மனித நாகரிகத்தின் மிச்சங்கள் கிடைத்துள்ளன. கி.மு.20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மம்மூத் எனப்படும் பிரமாண்டமான யானையின் தந்தத்தில் செதுக்கப்பட்ட வீனஸ் சிலை கிடைத்துள்ளது. இந்த சிலையின் இடுப்பில் நார்களால் இணைக்கப்பட்ட பாவாடையைப் போல செதுக்கப்பட்டுள்ளது. மேலாடை எதுவும் இல்லை. எனவே, உடை என்பது அந்தக் காலகட்டத்தில் அடையாள பூர்வமானதாக மட்டுமே கருதப்பட்டிருக்கலாம்.
அந்த காலகட்டத்தில் கூட, அவர்களுக்கு உணவா? உடையா? என்ற குழப்பமான சிந்தனை ஏற்பட்டிருக்கக் கூடும். இருந்தாலும், அவர்கள் தங்கள் உடலுக்கு அடக்கமான வகையில் விலங்குகளின் தோலை உடையாக செய்து அணிந்தனர். மனிதர்கள் தாங்கள் வாழ்ந்த பகுதிகளின் தட்பவெப்ப நிலைக்கு தகுந்தபடிஉடைகளை அணிய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஐரோப்பா மற்றும் வடக்கு ஆசிய பகுதிகளில் குடியேறியவர்கள் குளிரில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள கட்டாயமாக உடை அணிய வேண்டியிருந்தது.
உடைக்காக விலங்குகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலையில், எத்தனை விலங்குகளைத்தான் அவர்கள் வேட்டையாட முடியும்? விலங்குகளின் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், பனிப்பிரதேசங்களில் விலங்குகளே இல்லாத நிலையில், அவர்கள் மாற்று வழியைத் தேர்வு செய்யத் தொடங்கினர். விலங்குகளைக் கொன்று தோலை பயன்படுத்துவதைக் காட்டிலும், அவற்றின் உரோமங்களை உடையாகப் பயன்படுத்தும் வழியை அறிந்தனர். உடை நெய்யும் தொழில்நுட்பம் அவர்களுக்கு தெரியாது. ஆனால், நீளமான உரோமங்களை கத்தையாக தொடுத்து ஆடையாக அணியும் அறிவு அவர்களுக்கு இருந்தது.
விவசாயம் செய்யத் தொடங்கிய நிலையில், விலங்குகளை பழக்கப்படுத்தவும், திறனுக்கு ஏற்ற வகையில் அவற்றை பயன்படுத்திக்கொள்ளவும் தெரிந்திருந்தனர். மீன் முள், விலங்குகளின் கூர்மையான எலும்புகளை தையல் ஊசியாகப் பயன்படுத்தும் பக்குவம் வந்திருந்தது. அவர்கள் தோல்களை இணைத்து அணியத் தொடங்கினர். பெண்கள்தான் நார்களைக் கொண்டு ஆடைகளை உருவாக்கினர். நடந்துகொண்டே உடைகளை உருவாக்கும் வகையில் எளிய கருவிகளை அவர்கள் கையாண்டனர். உடைகளை நெய்யும் பழக்கம் எப்போது தொடங்கியது என்பதை சரியாக தீர்மானிக்க முடியவில்லை.
(இன்னும் வரும்)
முந்தைய பகுதி:
மனிதன், நிர்வாணத்தை எண்ணி வெட்கப்பட்ட தருணம்! - உடையின் கதை #1