உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 7 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 30க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மனிதர்கள் இதில் இருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள மாஸ்க், சானிடைசர் போன்றவற்றைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் இணையத்தளங்களில் வெளியாகியுள்ள ஒரு புகைப்படம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு முதியவர் சைக்கிள் ஒட்டிச்செல்வது போல உள்ள அந்த புகைப்படத்தில், அவர் அணிந்திருந்த மாஸ்க் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. உணவுப்பொருட்களை எடுத்துச் செல்லும் கோணி சாக்கை மாஸ்க் வடிவில் அவர் அணிந்துள்ளதைக் கூர்ந்து கவனித்தால்தான் தெரிய வருகின்றது. வைரஸ்களிடம் இருந்து பாதுகாக்க மாஸ்க் அணிய சொன்னால், வைரஸ்கள் அதிகம் இருக்கும் ஒரு சாக்கை அணிந்து செல்கின்ற அவரின் அறியாமையை என்னவென்று சொல்வது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.