Skip to main content

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா முதல் இபிஎஸ், ஓபிஎஸ் வரை சாப்பிட்ட வாழைப்பழம்!

Published on 18/05/2018 | Edited on 18/05/2018
​    ​Sirumalai Banana


வாழைப்பழங்களிலே பூவம்பழம், நாட்டுப்பழம், ரஸ்தாலிப்பழம், பச்சைப்பழம், செவ்வாழை, வயக்காட்டுப்பழம் என பலவகையான பழங்கள் இருந்தாலும் கூட மருத்துவம் குணம் கொண்ட ஒரே பழம் சிறுமலை வாழைப்பழம்தான். பூட்டுக்கு பெயர் போன திண்டுக்கல், சிறுமலை வாழைப்பழத்திற்கும் பெயர்போய் வருகிறது. 
 

திண்டுக்கல்லிலிருந்து 20 கி.மீ தூரத்தில் அழகு செழிக்கும் பூமியாக உள்ளது சிறுமலை. இந்த சிறுமலை பகுதியில் உள்ள பழையூர், புதூர், தென்மலை, தாழக்காடு, கல்லறை மேடு, தவிட்டுக்காடு, வேளாண்பண்ணை போன்ற விவசாய நிலங்களில் பெரும்பாலும் வாழைப்பழம்தான் நடுவது வழக்கம். 

இப்படி நடக்கூடிய மலைவாழை ஒன்றரை வருடத்தில் பூ பூத்து காய் கொடுப்பது வழக்கம். ஆனால் மற்ற வாழைகள் போல் தண்ணீர் விடுவது, உரம் போடுவதெல்லாம் கிடையாது, இயற்கையின் மழையை நம்பியே இந்த மலை வாழைப்பழம் நடவு செய்யப்பட்டு வருகிறது. அதுபோல் உரமருந்து எதுவும் அடிப்பது கிடையாது. 

 

sirumalai


 

அதனாலேயே இயற்கையிலேயே இருக்கக்கூடிய மண் சத்து, மழை மூலம் வளரக்கூடிய இந்த சிறுமலை வாழைப்பழம், மற்ற வாழைப்பழங்களை விட ருசியாகவும், சத்தாகவும் மருத்துவ குணங்கள் கொண்டதாகவும் இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாங்கி சாப்பிட்டு வருகிறார்கள். அதுபோல் அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை போட்டி போட்டுக்கொண்டு வாங்கி சாப்பிட்டும் வருகிறார்கள்.

 

 

இப்பகுதியில் இருக்கக்கூடிய விவசாயிகள் பத்து ஏக்கர் முதல் 100 ஏக்கருக்கு மேல் வைத்திருக்கிறார்கள். ஆனால் ஆரம்ப காலத்தில் எல்லாம் ஒட்டுமொத்த விவசாயிகளும் தங்கள் விளைநிலங்களில் வாழையைத்தான் நட்டு வந்தனர். ஆனால் தற்பொழுது மழைதண்ணீர் சரிவர இல்லாததால் 50 சதவிகிதம் தான் வாழை நடுகிறார்கள். 
 

சில வாழைகளில் வைரஸ் கிருமி தாக்கி விடுகிறது. அதோடு காட்டுப்பன்றி, காட்டுமாடு, குரங்குகள் என வாழைத்தோட்டத்திற்குள் புகுந்து சேதப்படுத்தி வருகிறது. அதையெல்லாம் பாதுகாத்து தான் வாழைக்காயை வெட்டி வாகனம் மூலம் கமிசன் கடையில் போட்டு விற்பனை செய்தாலும் வரவுக்கும், செலவுக்கும் சரியாகத்தான் போகிறது. 
 

sirumalai banana


 

மழை வந்தால்தான் என்னைப் போல் உள்ள விவசாயிகள் இந்த வாழையில் வருமானம் பார்க்க முடியும். மழை இல்லை என்றால் நஷ்டம் தான். தற்போது ஓரளவுக்கு மழை பெய்து வருவதால் காய் வெட்டி எடுத்து வருகிறோம்.  இருந்தாலும் பெரும்பாலான விவசாயிகள் மழை தண்ணீருக்கு பயந்தே வாழை விவசாயம் செய்யாமல் பீன்ஸ், அவரைக்காய், சவ்சவ் போன்ற பயிறுகளை நட்டு வருவதால் சிறுமலை வாழைப்பழமும் நாளுக்கு நாள் வறட்சி குறைந்து அழிந்து வரும் சூழ்நிலையிலும் இருந்து வருகிறது என்றார் சிறுமலை விவசாயியான கண்ணன். 
 

இதுபற்றி திண்டுக்கல்லில் பிரபல சிறுமலை வாழைப்பழம் வியாபாரியான சையது இப்ராகிமிடம் கேட்டபோது...

"மற்ற வாழைப்பழங்களை மாதிரி இதை தாரோடு ஏலம் விடுவது இல்லை. தாரிலிருந்து வாழைக்காயை சீப், சீப்பாக அறுத்து அதில் சிறிது, பெரிதென தரம் பிரித்து ஐநூறு காய் இருப்பது போல் பொதியாக குவித்து ஏலம் விடுவார்கள். 
 

இப்படி ஏலம் நடக்கக்கூடிய ஒரு பொதி 2500 ரூபாயிலிருந்து 6 ஆயிரம் வரை போகும். அதை நாங்கள் ஏலத்தில் எடுத்து வந்து கடையில் உள்ள புகை அடுப்பில் ஒரு நாள் இருப்பது போல் புகை போட்டு எடுத்தாலே ஒரு நாள் அல்லது இரண்டு நாளில் காய் பழுத்துவிடும். அதைத்தான் நாங்களும் தரம் பிரித்து ஒரு பழம் ஆறு ரூபாயிலிருந்து பன்னிரெண்டு ரூபாய் வரை பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறோம். 

 

Sirumalai Banana

 

வரத்து அதிகமாக இருந்தால் விலை குறையும். இல்லையென்றால் விலை அதிகமாகத்தான் விற்க வேண்டும். இந்த சிறுமலை வாழைப்பழத்தை பொறுத்தவரை விலையை பெரிதாக யாரும் நினைக்கவில்லை. அந்த அளவுக்கு இந்த பழத்தில் இரும்பு சத்து இருக்கு அதோடு, வயிற்று வலி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டு வருபவர்கள் இந்த பழத்தை இரண்டு சாப்பிட்டாலே வயிற்றுவலியும் நின்றுவிடும். அதோடு இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டாலே உடலுக்கு கலர் கொடுக்கும். இந்த பழத்தில் வரும் சுவை போல் வேறு எந்த ஒரு மலைப்பழத்திலும் இருக்காது. 
 

மற்ற வாழைப்பழங்கள் இரண்டு நாள், மூன்று நாளைக்கு மேல் தங்காது. ஆனால் இந்த பழம் பத்து நாளைக்கு கூட வைத்து சாப்பிடலாம். தோல் கருப்பாகக் கருப்பாக டேஸ்டும் கொடுக்கும். அந்த அளவுக்கு இயற்கையாகவே வளரக்கூடிய வாழைப்பழம் தான் சிறுமலை வாழைப்பழம். அதுனாலயே அரசியல் தலைவர்கள் முதல் அதிகாரிகளிலிருந்து முக்கிய விஐபிக்கள் வரை இந்த பழத்தைத்தான் இன்னும் வாங்கி சாப்பிட்டு வருகிறார்கள். 

 

 

 

திண்டுக்கல் வழியாக எந்தத் தலைவர் ரயிலில் சென்றாலும், திண்டுக்கல்காரர்கள் வாங்கிக் கொண்டு போய் ரயில்நிலையத்தில் வைத்து கொடுத்துவிட்டு வருவார்கள். எனது அப்பா காலத்தில் எல்லாம் பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜி.அர்., ஜெயலலிதா போன்ற அரசியல் தலைவர்கள் வீடுகளுக்கு இங்குள்ள கட்சிப் பொறுப்பாளர்கள் வாங்கிட்டு போய் கொடுத்திருக்கிறார்கள். அதன்பின் தற்போது வரை முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பி.எஸ், முன்னாள் முதல்வர் ஸ்டாலின், எம்பி கனிமொழி, திருமாவளவன், விஜயகாந்த், திருநாவுக்கரசு போன்ற அரசியல் கட்சித் தலைவர்களின் வீடுகளுக்கு கட்சிப் பொறுப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் உறவினர்கள் யார் போனாலும் இங்கு வந்து இந்த சிறுமலை வாழைப்பழத்தை வாங்கிட்டுத்தான் வருகிறார்கள். 

ஏன் உங்க ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்களின் வீட்டிற்கு கூட இங்கிருந்துதான் சிறுமலை வாழைப்பழம் வாங்கிக்கொடுத்து வருகிறார்கள். அதுபோல் சென்னை உள்பட மற்ற மாவட்டத்தில் உள்ள அதிகாரிகளின் வீடுகளுக்கும், முக்கிய விஐபிக்களின் வீடுகளுக்கும் இங்கிருந்துதான் சிறுமலை வாழைப்பழம் போகிறது. அந்த அளவுக்கு அனைத்து தரப்பு மக்களும் விரும்பி சாப்பிடக்கூடிய பழமாக இருக்கிறது சிறுமலை வாழைப்பழம் என கூறினார். இப்படி ஒரு  மருத்துவ குணம் கொண்ட சிறுமலை வாழைப்பழத்தின் விளைச்சலை அதிகரிக்க அரசும் முன் வர வேண்டும்" என்று சிறுமலை வாழைப்பழத்தின் பெருமையைக் கூறிய அவர், கோரிக்கையையும் வைத்தார்