புகைபிடிப்பவர் ஒவ்வொருவரும் தங்களது மரணம் சம்பவிப்பதற்குள் சராசரியாக 9730 டாலர்கள் சிகரெட் கம்பெனிக்கு சம்பாதித்துத் தருகின்றனர் என ஆய்வுமுடிவில் கண்டறியப்பட்டுள்ளது.
புகை உயிருக்குப் பகையென்பது, சிகரெட் பிடிப்பவர் ஒவ்வொருவருக்குமே தெரியும். ஆனால் யார் பயப்படுகிறார்கள்..
ஆப்பிரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள்தான், சிகரெட் கம்பெனிகளுக்கு கொள்ளை லாபம் ஈட்டித்தருகின்றன. இந்த நாடுகளின் அளவுக்கதிகமான மக்கள்தொகையும், விழிப்புணர்வின்மையும் இதற்குக் காரணம்.
அமெரிக்கன் கேன்சர் சொசைட்டி எனும் லாபநோக்கற்ற நிறுவனம், உலகம் முழுவதும் புகையிலை தொடர்பான நோய்கள், பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்தியது. புகையிலைத் தடுப்பு, விழிப்புணர்வு தொடர்பாக ஒவ்வொரு நாடும் அக்கறை எடுத்து பல முயற்சிகளை மேற்கொண்டாலும், புகையிலை நிறுவனங்கள் புதிய புகையிலைத் தயாரிப்புகள், விளம்பர உத்திகள் மூலம் தங்கள் லாபத்தில் அடிவிழாமல் பார்த்துக்கொள்கின்றன என்கிறது இந்நிறுவனத்தின் ஆய்வுமுடிவு.
நம் நாட்டிலெல்லாம் புகையிலைக் கம்பெனி வேறெந்த உத்தியும் மேற்கொள்ளவேண்டாம். சினிமாவில் டாப் ஹீரோவைப் பிடித்து, ஸ்டைலாக நான்கைந்து காட்சிகளில் சிகரெட் பிடிப்பதுபோல் காட்சிவைத்தால் போதும். ரசிக சிகாமணிகள் கெட்டியாகப் பிடித்துக்கொள்வார்கள் சிகரெட்டை.
உலகெங்கும் புகையிலைப் பயன்பாட்டால் 71 லட்சம் பேர் உயிரிழக்கிறார்களாம். இதில் பெரும்பான்மை மரணம் சிகரெட்டாலயே ஏற்படுகிறது. சிகரெட்டே பிடிக்காமல், சிகரெட் பிடிப்பவர்களின் அருகிலிருக்கும் நண்பர்கள், மனைவி, குழந்தைகள், தொழிலாளிகள் போன்ற சிகரெட் புகையின் தாக்கத்துக்கு உள்ளாகிறவர்கள், ஆண்டுக்கு எட்டு லட்சம் பேர் இறந்துபோகிறார்களாம்.