ஹோமியோபதி மருத்துவ முறையைப் பின்பற்றுபவர்கள் செய்ய வேண்டியவை என்ன, செய்யக்கூடாதவை என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைத் தெளிவாக ஹோமியோபதி மருத்துவர் டாக்டர் ஆர்த்தி விளக்குகிறார்.
பத்தியம் போன்ற உணவு நடைமுறைகளை ஹோமியோபதியில் நாங்கள் பரிந்துரைப்பதில்லை. ஹோமியோபதி சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள் காபி குடிக்கக் கூடாது. காபி இல்லாமல் இருக்கவே முடியாது என்று சொல்லும் நோயாளிகளிடம் குறைந்த அளவில் காபி எடுத்துக்கொள்ளும்படி அறிவுரை சொல்வோம். ஆஸ்துமா நோயால் அவதிப்படுபவர்கள் வேர்க்கடலை, முருங்கைக்கீரை சாப்பிடக்கூடாது.
உணவுக் கட்டுப்பாடுகள் என்பது மருந்துகளை எடுத்துக்கொள்ளும் வரை தான். உங்கள் நோய் குணமான பிறகு நீங்கள் வழக்கமான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். அலோபதி முறையை சிறுவயதிலிருந்து பின்பற்றுபவர்கள் கூட ஹோமியோபதி முறைக்கு மாறலாம். ஹோமியோபதி முறையைப் பின்பற்றும் பலர் அலோபதி மருந்துகளை எடுத்துக் கொள்வதில்லை. அலோபதி தடுப்பூசிகள் தான் பாதுகாப்பானவை என்கிற எண்ணம் தேவையில்லை. அதற்கு நிகரான மருந்துகள் ஹோமியோபதியிலும் உள்ளன.
குழந்தைகளுக்கும் ஹோமியோபதி மருந்துகளை பயப்படாமல் கொடுக்கலாம். வயதானவர்களும் ஹோமியோபதி மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அவர்கள் உடனடியாக அலோபதி மருந்துகளை நிறுத்தக் கூடாது. இரண்டையும் ஒரே நேரத்தில் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம். ஹோமியோபதியில் எங்களிடம் வரும் நோயாளிகள் குறித்த முழுமையான ஆராய்ச்சிகளை நாங்கள் மேற்கொள்கிறோம். அதுவே அவர்களுக்கான நம்பிக்கையை ஏற்படுத்தும்.
நாள்பட்ட நோய்களையும் ஹோமியோபதி முறையில் குணப்படுத்தலாம். மூட்டு வலி, இடுப்பு வலி, ஆஸ்துமா, சர்க்கரை நோய், தோல் நோய்கள் என்று பலவும் இதில் அடங்கும். நோயாளிகளுக்குப் பொறுமை மிகவும் அவசியம். முதலில் நோயாளிகளை மனதளவில் நாங்கள் தேற்றுவோம். அவர்களுக்கு எது பிடிக்கும் பிடிக்காது, அவர்களுடைய அன்றாட நடைமுறைகள் என்னென்ன என்பதை அறிந்து கொள்வோம். அதன் பிறகு தான் அவர்களுக்கான மருந்துகளை நாங்கள் முடிவு செய்வோம்.