பல நோய்களை முத்திரைகளின் மூலம் தீர்வு காண முடியும் என சித்த முத்திரை மருத்துவர் சாலை ஜெய கல்பனா விளக்கம் அளிக்கிறார்.
டயாபெடிக் வருவதற்கு முன்பாக 20 வயதில் இருப்பவர்களுக்கு கூட ப்ரீ-டயாபெடிக் என்ற கண்டிஷன் வருகிறது. அதாவது அவர்களின் பெற்றோருக்கு இருந்த வாழ்வியல் சூழ்நிலையும் அப்படி இருக்க, இதுபோன்று ப்ரீ-டயாபெடிக் நிலை வருகிறது. அப்படி இருப்பவர்கள் அபான முத்திரை மற்றும் பிராண முத்திரை செய்வதினால் நல்ல பலன் தரும். இதை சரியான முறையில் சரியாக செய்து வருவது முக்கியம். பிராண முத்திரையை கழிவு நீக்க முத்திரை செய்து முடித்து, அபான முத்திரையும் முடித்து பிராண முத்திரையை செய்யவே தலை முதல் பாதம் வரை அனைத்து உபாதைகளையும் சரி செய்யும். பிராண முத்திரை நம் உடலில் இயங்கும் சக்தியை நன்றாக சுற்ற வைக்கும். இதற்குத் தடையாக ஆங்காங்கு எதுவும் இருக்கக்கூடாது. எனவே முதலில் அபான முத்திரை செய்து சரி செய்துவிட்டு பிராண முத்திரையை செய்ய வேண்டும்.
நம் உடலில் எல்லா தொந்தரவும் பிராண சக்தி குறைவது தான். பிராண சக்திக்கான முத்திரையை செய்யும்போது கண்களில் கண்ணாடி போடுவது கூட தடுக்க முடியும். தைராய்டு, தலைமுடி பிரச்சனை, பி.சி.ஓ.டி, ஒற்றை தலைவலி என்று அனைத்தையும் சரி செய்யும். இதை கண்டிப்பாக மல, ஜல கழிவு இல்லாமல், உணவுக்கு முன் வெறும் வயிற்றில் தான் செய்ய வேண்டும். உணவு உடலில் இருக்கும் போது செய்தால் மூச்சு விடுதலில் சிரமம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஒவ்வொரு முத்திரைக்கும் கால அளவு இருக்கிறது. ஆகாய முத்திரை என்பது ஒரு நாளைக்கே 20 நிமிடம் மட்டுமே 5 நிமிடமாக பிரித்து பிரித்து செய்ய வேண்டும். அதுவே அபான முத்திரையை 20 முதல் 40 நிமிடம் வரை ஒரே நேரத்தில் கூட செய்யலாம். ஒவ்வொருவரின் உடல் வாகு பொறுத்து கால நிலை, உடல் காலகட்டம், செய்யும் முறை என்று மாறுபடும்.
இந்த முத்திரைகளை ஒவ்வொன்றாக பயிற்சி எடுத்த பின் முறையாகச் செய்ய வேண்டும். முன்னதாக இரண்டு நாளில் எல்லா முத்திரைகளையும் சொல்லி கொடுக்கும் முறை இருந்தது. இப்போது மாற்றி 14 வாரங்கள் எடுத்து ஒவ்வொரு முத்திரையாக அதாவது கழிவு நீக்க முத்திரை என்று முதலில் ஆரம்பித்து குழுக்களாக செய்து அவரவர் உடலில் ஏற்படும் மாற்றங்களை வைத்து அதற்கேட்ப நெறிமுறைப்படுத்தி முத்திரை வகுப்பு நடத்தப்படுகிறது. ஒரு சிலருக்கு முத்திரை செய்யும்போதே அம்மை கொப்புளங்கள் போன்று உடலில் வரும். ஒரு சிலருக்கு உணவைக் கண்டாலே பிடிக்காது. அவரவர் கழிவுக்கேற்றார் போல உணவு வகை பிடிக்காமல் போகும். அந்த மாற்றங்களை வைத்து பிரச்சனைகளை அறிய முடியும். முதலில் மண் முத்திரையில் ஆரம்பித்து செய்ய வேண்டும். மண் முத்திரை என்பது எல்லாவற்றிற்கும் தொடக்கத்தை குறிக்கும். தொடங்க வேண்டும் என்பதை தள்ளிப் போடும் பழக்கம் உள்ளவர்கள், முதல் வாரம் இதனை செய்ய வேண்டும். இதிலும் குழந்தைகள், பதின் வயதுக்காரர்கள் செய்யக்கூடாது. ஏனென்றால் அளவு கடந்த சக்தியை கொடுக்கக் கூடியது. அதற்கடுத்த வாரம் நீர், அடுத்து நெருப்பு, காற்று, ஆகாயம் என்று முறையாக செய்ய வேண்டும்.
தலை சுற்றல், மோஷன் சிக்னஸ் என்று சொல்லக்கூடிய தொந்தரவு, ஆகாயத்தில் விமான பயணம், மலை தொடர் பயணம் மேற்கொள்ளும்போது ஏற்படக்கூடிய தொந்தரவு, காதில் நீர் சமநிலை இல்லாமல் இருப்பவர்களுக்கு இந்த ஆகாய முத்திரை வேலை செய்யும். ஆனால் எடுத்தவுடன் ஆகாய முத்திரை செய்தல் கூடாது. மற்ற வரிசையில் உள்ளதை முறையாக செய்த பின்னரே இதனை செய்யவேண்டும். திருமந்திர பாடலில், மருந்து என்பதற்கு ஒரு தனி பாடலே இருக்கிறது.
அதாவது, "மறுப்பது உடல் நோய் மருந்தெனெலாகும்
மறுப்பது உளநோய் மருந்தெனச்சாலும்
மறுப்பது இனிநோய் வாராதிருக்க
மறுப்பது சாவையும் மருந்தெனலாமே.''
அதாவது உடல் நோயை எது தடுக்கிறது. எது மருந்து, நமது மன பிரச்சனையை எது சரி செய்கிறதோ அதுதான் மருந்து. இனி பிரச்சனை வராமல் தடுக்கக் கூடியது எதுவோ அதுவே மருந்து. மரணத்தை நெருங்கக் கூடிய அவசர நிலையில் கூட ஏற்படக்கூடிய அறிகுறிகளில் இருந்து முத்திரைகளை செய்யும்போது அதிலிருந்து தப்பிக்க முடியும்.