இன்று காலை வெளியில் வரும்போது ஒரு ''மனிதன் அல்லது மனுஷி'' ரோட்டில் மயங்கிக் கிடந்ததை... வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மத்தியில், அந்த மனிதத்துக்கு தண்ணீரும் கையில் உள்ள பிஸ்கட் கொடுத்து என்வீட்டுக்கு வாங்கி சென்ற பால் பாக்கெட்டையும் கொடுத்தேன், கண்களில் நன்றி ஒளி. சுற்றி உள்ளவர்களில் சிலர் என்னை ''கிண்டலும் கேலியுமான''பார்வையுடன் கடந்தனர். மூன்றாம் பாலினம் நாம் வேண்டி விரும்பி உருவாக்கும் இனம் அல்ல. ஆண் உடலில் பெண்மையும்... பெண் உடலில் ஆண்மையும் ''இடறிவிழுந்த'' விபத்து! கடுமையான இந்த ஊரடங்கு வேளையில் மூன்றாம் பாலினத்தவரை மனிதாபிமானத்துடன் அணுகலாமே. அவர்கள் கண்களில் தெரியும் ஏக்கமும் வலியும் உங்களால் உணர முடிகிறதா?

கரோனா போன்ற நோய்கள் எப்போதாவது வரும் போகும். பசி தினமும் தொற்றும் நோய். உயிர் முக்கியமா? உணவு முக்கியமா? இதோ..கரோனா கண்பித்து விட்டது. எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாத மனிதனடா நாம் என்று. பதுக்கி வைத்தவரும்கூட, பதுங்கி வாழ வேண்டிய வாழ்வியல் சூழலை ஊரடங்கு அளித்துவிட்டது. பல்லாண்டுகால சமூக புறக்கணிப்பு, பொருளாதார பலம் இல்லாமை, பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இன்று ஊருக்குள் மக்கள் நடமாட்டம் இல்லவே இல்லை. மனித இனத்தின் மாறுபட்ட கூறுகளான அவர்கள் இன்றைய சூழலில் சாப்பாட்டுக்கு என்ன செய்வார்கள் என நினைத்தாலே உள்ளம் பதறுகிறது.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை - குறள்
பெரிய பெரிய ஆசான்களும், மகான்களும், தத்துவ ஞானிகளும் சொன்னதை அலட்சியமாக கடந்து சென்ற நமக்கு ''எலெக்ட்ரானிக் மைக்ரோஸ்கோப்'' பாலும் காண முடியாத ஒருநுண்ணிய உயிர்க்கிருமி பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறது. பகிர்ந்துண்டு வாழுதல் இயற்கை நமக்கு கற்றுக் கொடுத்துள்ள வாழ்வியல். காலம் என்ற ஆசான் கரோனா மூலம் நமக்கு கற்றுக் கொடுத்திருக்கும் இந்த பாடத்தில் இருந்தும் நாம் மனித நேயத்தை கற்றுக் கொள்ளவில்லை என்றால்.... அடுத்த பாடம் இன்னும் கடுமையானதாகவே இருக்கும். காலம் கணக்கு ஆசிரியர் போல கண்டிப்பானது.