ஜான்சன் & ஜான்சன், அமெரிக்காவைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் குழந்தைகளுக்கான பவுடர், பேபி லோஷன் போன்றவை மிகவும் பிரபலமானவை. இந்த நிறுவனம், தற்போது கரோனா தொற்றுக்கான தடுப்பூசியைத் தயாரித்ததோடு, அதற்கு அங்கீகாரம் கேட்டு விண்ணப்பித்துள்ளது.
உலகில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் பெரும்பாலான தடுப்பூசிகள், இரண்டு டோஸ்களைக் கொண்டவை. இந்த இரண்டு டோஸ்களை எடுத்துக்கொண்டால்தான் அவை கரோனாவில் இருந்து முழுமையான பாதுகாப்பை அளிக்கும். ஆனால் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசி, ஒரே ஒரு டோஸை மட்டுமே கொண்டதாகும். அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம், இந்த மருந்துக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக இன்று (26.02.2021) முடிவெடுக்கவுள்ளது.
இந்தநிலையில் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் வெளியிட்டுள்ள ஆவணத்தில், ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி, சோதனையில் பாதுகாப்பாகவும், செயல்திறன் கொண்டதாகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுவிடும் எனத் தெரிகிறது. இந்தத் தடுப்பூசி கரோனாவுக்கு எதிராக 66 சதவீத பாதுகாப்பு வழங்குவதாகவும், கரோனாவின் பாதிப்பு மோசமாகாமல் தடுப்பதில் 85 சதவீத பாதுகாப்பு வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசி அமலுக்கு வந்தால், அமெரிக்காவில் பயன்பாட்டிற்கு வரும் மூன்றாவது தடுப்பூசி இதுவாகும். ஏற்கனவே அங்கு பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.