உலகளவில் கரோனா பாதிப்பு குறைந்திருந்தாலும், இங்கிலாந்தில் தற்போது கரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. இதற்கு டெல்டா வகை கரோனா பரவலே காரணமாகும். டெல்டா வகை கரோனா, மற்ற கரோனாக்களை விட அதிக பரவல் தன்மையைக் கொண்டது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், டெல்டா வகை கரோனா குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அந்நாட்டு இளம் வயதினருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "மிகவும் பரவக்கூடிய தன்மையைக் கொண்ட கரோனா திரிபான டெல்டா வகை கரோனா, இங்கிலாந்தில் 12 முதல் 20 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே வேகமாக பரவிவருகிறது. நீங்கள் இளம் வயதினராக இருந்தால், இன்னும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாதவராக இருந்தால், இது நீங்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான நேரம். உங்களையும் நீங்கள் விரும்பும் நபர்களையும் பாதுகாத்துக்கொள்ள இது சிறந்த வழியாகும்" என கூறியுள்ளார்.
அதேபோல் அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகரும், அந்த நாட்டின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் மையத்தின் இயக்குநருமான அந்தோனி ஃபாஸி, அமெரிக்காவில் 6 சதவீத கரோனா பாதிப்புகள் டெல்டா வகை கரோனாவால் ஏற்படுவதாக தெரிவித்துள்ளார்.