தென்னாப்பிரிக்கா நாட்டில் 50க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளுடன் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் கரோனா உலகமெங்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒமிக்ரான் கரோனாவில் உள்ள 50க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளில், 30க்கும் மேற்பட்ட பிறழ்வுகள் வைரஸின் ஸ்பைக் ப்ரோட்டினில் ஏற்பட்டிருப்பதால், இந்த வகை கரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.
இந்தநிலையில், அமெரிக்காவின் முன்னணி மருத்துவ நிபுணரும், அமெரிக்க அதிபருக்கான மருத்துவ ஆலோசகருமான ஆண்டனி ஃபௌசி, ஆறுதல் அளிக்கும் தகவலைத் தெரிவித்துள்ளார். ஒமிக்ரான் கரோனா குறித்து பேசியுள்ள அவர், ஆரம்பகட்ட அறிகுறிகள், ஒமிக்ரான் கரோனா அதிக பரவல் தன்மையைக் கொண்டது என்பதைக் காட்டுகிறது. அதன் பரவும் தன்மை டெல்டாவைவிட அதிகமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ஒமிக்ரான் கரோனா, டெல்டா வகை கரோனாவைவிட தீவிரமானதல்ல என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது எனவும், ஆனால் அதை முழுவதுமாக உறுதிசெய்ய அதிக காலம் எடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.