பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் சீரிஸில், 'ஜாக் ஸ்பாரோ' கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் உலகப் புகழ் பெற்றவர் ஜானி டெப். இவர், கடந்த 2015ஆம் ஆண்டு தன்னைவிட 25 வயது குறைவாக இருந்த அமெரிக்க நடிகை ஆம்பர் ஹேர்ட்டை காதலித்து திருமணம் செய்தார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 15 மாதங்களில் இருவரும் விவாகரத்து செய்தனர். இந்த நிலையில், 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையில் கடந்த 2018ஆம் ஆண்டு பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து ஆம்பர் ஹேர்ட் ஒரு கட்டுரை எழுதினார்.
ஜானி டெப்பின் பெயரைக் குறிப்பிடாமல் அந்தக் கட்டுரையில் அவர் கூறியிருந்த விஷயங்கள் ஹாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. ஜானி டெப்பிற்கு கிடைத்த சில பட வாய்ப்புகளும் அவர் கையைவிட்டு நழுவின. குறிப்பாக ’பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' படத்திலிருந்தும் ஜானி டெப் நீக்கப்பட்டார்.
இதையடுத்து விரக்தியடைந்த ஜானி டெப் தனது முன்னாள் மனைவிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை 3 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த நிலையில், ஜானி டெப்புக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில் ஜானி டெப் அவதூறுக்கு ஆளானதை நிரூபிக்க முகாந்திரம் இருப்பதால், இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 116 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க ஆம்பர் ஹேர்ட்டுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.