தந்தையை கடனாளி என கூறி கல்விக்கடன் வழங்க மறுத்தது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய எஸ்.பி.ஐ. வங்கிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி தீபிகா, பாரத ஸ்டேட் வங்கியின் வேதாரண்யம் கிளையில் கல்விக்கடனுக்காக விண்ணப்பித்தார். இவரது தந்தை பெற்ற கடன்களை முறையாக செலுத்தவில்லை என கூறி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், மாணவியின் தந்தை ஏற்கனவே வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் உள்ளார் என்று வங்கி நிர்வாகம் தெரிவித்த பதிலை ஏற்று மாணவியின் கல்விக் கடன் வழங்க மறுத்து வங்கி பிறப்பித்த உத்தரவு சரியே என கூறி தீபிகாவின் மனுவை தள்ளுபடி செய்தார்.
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தீபிகா மேல்முறையீடு செய்துள்ளார். மேலும், கடனை செலுத்தாதவர் என தனது தந்தையை குற்றம் சுமத்திய எஸ்.பி.ஐ. அதற்குமான நஷ்ட ஈடாக 10 லட்ச ரூபாய் தர உத்தரவிடவும் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி ஹுலுவாடி ஜி. நீதிபதி ரமேஷ், நீதிபதி எம்.தண்டபாணி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, தீபிகாவின் தந்தை கடன் பெற்று செலுத்தாதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக எஸ்.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதுதொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்ற தாக்கல் செய்ய எஸ்.பி.ஐ.-க்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஜூலை 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.