மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கும் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
உலக மக்கள் தொகை நிலை அறிக்கை 2023ஐ ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் நேற்று வெளியிட்டுள்ளது. இதில் உலகில் மக்கள் தொகை வளர்ச்சி எவ்வாறு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் தொகையில் இந்தியா சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்திய மக்கள் தொகை 142.86 கோடியாக உள்ளது. அதே நேரத்தில் சீன மக்கள் தொகையானது 142.57 கோடியாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் அமெரிக்க மக்கள் தொகை 34 கோடியாக மூன்றாம் இடத்தில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 60 ஆண்டுகளாகத் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்த சீன மக்கள் தொகையானது கடந்த ஆண்டுதான் முதல் முறையாக அதற்கு முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் குறையத் தொடங்கியது. சீனாவின் இந்த மக்கள் தொகை குறைவு விகிதம் மேலும் தொடர்ந்து குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் மக்கள் தொகையானது 2050 ஆம் ஆண்டில் 166.8 கோடியாக இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.