இஸ்ரேல், பாலஸ்தீனத்திற்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் நடைபெற்றுவருகிறது. கிழக்கு ஜெருசலேம் பகுதி யாருக்குச் சொந்தம் என்பதே இரு தரப்பு மோதலின் மையமாக இருந்துவருகிறது. இந்தநிலையில், ஜெருசலேமில் உள்ள ஷைக் ஜாரா மாவட்டத்தில், யூதர்கள் உரிமை கொண்டாடும் நிலத்தில் வசித்துவரும் பாலஸ்தீன குடும்பங்களை வெளியேற்ற இஸ்ரேல் அரசு நடவடிக்கை எடுத்தது. இதன்தொடர்ச்சியாக, ஜெருசலேமில் உள்ள அல் அச்சா மசூதி அமைந்துள்ள பகுதியில் கடந்த 10ஆம் தேதி இஸ்ரேல் போலீசாருக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து இந்த மோதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதியைத் தன்னாட்சியாக ஆண்டுவரும் ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்குமான மோதலாக மாறியது. 10 தேதி தொடங்கி கடந்த 25ஆம் தேதிவரை, 11 நாட்களாக இருதரப்பும், ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்தினர். அதன்பிறகு உலக நாடுகளின் அழுத்தம் மற்றும் சமாதான முயற்சிகள் காரணமாக போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
இந்த 11 நாள் சண்டையில் இஸ்ரேல் தரப்பில் இரண்டு குழந்தைகள், ஒரு இந்தியர், தாய்லாந்து நாட்டைச் சேர்த்த இருவர் என 12 பேர் பலியாகியுள்ளனர். பாலஸ்தீன தரப்பில் 232 பேர்வரை இறந்துள்ளனர். இவர்களில் 65 குழந்தைகளும் அடங்குவர்.
இந்தநிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில், இஸ்ரேல் - காசாவிடையே 11 நாட்கள் நடைபெற்ற சண்டையின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்தும், கிழக்கு ஜெருசேலம் உட்பட ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன பகுதிகள் மற்றும் இஸ்ரேலுக்குள் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் விசாரிக்க சர்வதேச குழு அமைக்கப்பட வேண்டும் என தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு 24 நாடுகள் ஆதரவாகவும், 9 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இந்தியா உட்பட 14 நாடுகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன.
இதனால் தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறியது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் - காசா மோதலின்போதும், இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன பகுதிகளுக்குள் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் விசாரிக்க ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம், சர்வதேச குழு அமைக்கச் செய்துள்ளது. இந்த முடிவைப் பலஸ்தீனமும், ஹமாஸ் அமைப்பும் வரவேற்றுள்ளன.
அதேநேரத்தில் இது இஸ்ரேலுக்குப் பின்னடைவாக கருதப்படுகிறது. மனித உரிமைகள் ஆணையத்தின் முடிவுக்கு இஸ்ரேல் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் மனித உரிமைகள் ஆணையத்தின் முடிவு வெட்கக்கேடானது என்றதோடு, இந்த முடிவு மனித உரிமைகள் ஆணையத்தின் ஆவேசமான இஸ்ரேல் எதிர்ப்பின் மற்றொரு எடுத்துக்காட்டு என விமர்சித்துள்ளார்.