அமெரிக்காவில் தற்போது நடந்து முடிந்துள்ள அதிபர் தேர்தலில், ஜோ பைடன் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில், அதிபர் தேர்தல் முடிவுகளை அங்கீகரிக்கும் நாடாளுமன்ற கூட்டம் இன்று (07/01/2021) தொடங்கியது.
அப்போது ட்ரம்பின் ஆதரவாளர்கள் குழு ஒன்று, அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டது. இந்த வன்முறையில், நான்கு பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறைக்குப் பிறகு, நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில், ஜோ பைடனின் வெற்றிக்கு எதிராக, ட்ரம்ப் தரப்பு எழுப்பிய ஆட்சேபனைகள் நிராகரிக்கப்பட்டு, அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனின் வெற்றி உறுதிசெய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் 46வது பிரதமராக ஜோ பைடன் பதவி ஏற்கவுள்ளார். இந்தநிலையில், தற்போதைய அதிபர் ட்ரம்ப், வரும் 20 ஆம் தேதி முறையான அதிகாரமாற்றம் நடைபெறும் என அறிவித்துள்ளார். தேர்தல் முடிவுகளில் முற்றிலும் உடன்படவில்லை என்றாலும் அதிகார மாற்றம் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.