அல்பினிசம் என்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் உறுப்புகளை வீடுகளில் வைத்திருந்தால் பணம் கொட்டும், விரைவில் கோடீஸ்வரர்கள் ஆகிவிடலாம் என்கிற மூட நம்பிக்கையால், அவர்களின் கைகள், விரல்கள், கால்கள் என ஒவ்வொரு உறுப்புகளுக்கும் தனித்தனி விலையுடன் விற்கப்படும் சம்பவம் தான்சானியா நாட்டில் நடந்து வருகிறது.
அல்பினிசம் நோயால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் நோயுடன் போராடுவதை காட்டிலும், உறுப்பு திருட்டிலிருந்து தப்பிப்பதற்கான போராட்டமே அந்நாட்டில் மேலோங்கி காணப்படுகிறது. இந்த மூடநம்பிக்கை அந்நாட்டில் அதிகரித்துவரும் வேளையில், இதற்கான கருப்பு சந்தையும் அங்கு உருவாக்கி வருகிறது.
அல்பினிசம் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடலுறுப்புகளுக்காக பலர் அலையும் நிலையில், நோய் பாதித்தவர்களின் உறவினர்களே பணத்திற்காக இந்த நோயாளிகளை கடத்தி உறுப்புகளை விற்கின்றனர். கைகள், விரல்கள், கால்கள் என ஒவ்வொரு உறுப்புகளுக்கும் தனித்தனி விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மருத்துவர்களும் அந்நாட்டில் கொள்ளை லாபம் பார்த்து வருகின்றனர். இந்த உறுப்பு திருட்டு தற்போது ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் வெளி உலகிற்கு தெரிய வந்துள்ள நிலையில், இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.