அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஒருபுறம் கரோனாவால் அந்நாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டு, தொழில்துறை முழுவதும் முடங்கியுள்ள நிலையில், குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளரான ட்ரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடென் ஆகியோர் நாடு முழுவதும் முழுவீச்சில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் பிரச்சாரத்திற்கு மத்தியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட ட்ரம்ப் ஒருவார கால ஓய்வுக்குப் பின்னர் மீண்டும் தேர்தல் பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளார். இதில் ஜார்ஜியாவில் நேற்று நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசிய ட்ரம்ப், "ஜனநாயகக் கட்சியினர் அமெரிக்காவை கம்யூனிஸ்ட் நாடாக மாற்ற விரும்புகின்றனர். அவர்களிடம் எதுவும் இல்லை. மக்களின் மதிப்பு மீது வெறுப்புகள் இருக்கிறது. மிகவும் மோசமான வேட்பாளருடன் போட்டியிடுகிறேன். ஒருவேளை நான் தோல்வியடைந்தால், நான் மகிழ்ச்சியாக இருக்க மாட்டேன். தேர்தலில் தோற்றால் நான் இந்த நாட்டை விட்டு வெளியேறலாம். அதுதான் நல்லது" எனத் தெரிவித்துள்ளார்.