
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் கடந்த 5 ந் தேதி இரவு இரு தரப்பு இளைஞர்களிடையே ஏற்பட்ட பிரச்சனையில் ஒரு தரப்பு குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த மற்றொரு தரப்பு இளைஞர்களால் மோதல் ஏற்பட்டு இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர். போலீசார் ஒருவரும் காயமடைந்தார். இந்த சம்பவத்தில் அந்த குடியிருப்பில் ஆள் இல்லாத வீடு, 3 இரு சக்கர வாகங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது மேலும், பல வீடுகளின் கூறைகள், மோட்டார் சைக்கிள்கள், கார்கள் உடைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் சிகிச்சையில் உள்ளவர்கள் உள்பட இதுவரை ஒரு தரப்பில் 20 பேரும் மற்றொரு தரப்பில் 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தப் பிரச்சனை மாநில அளவில் எதிரொலித்துள்ள நிலையில் பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினரும் வந்து இரு தரப்பினரையும் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். அந்த வகையில் சி.பி.எம். கட்சியின் மாநிலச்செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வடகாடு பகுதிக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு கிராமத்தில் சாதி ஆதிக்க சக்திகளால் தாக்குதலுக்கு உள்ளாகிய பட்டியலினத்தைச் சேர்ந்த மக்களை சிபிஎம் சார்பில் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். பாதிக்கப்பட்ட மக்களுடன் சிபிஎம் துணை நிற்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.