இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை (ஈஸ்டர் திருநாள்) அன்று நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் தேவாலயங்களில் 8க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய வெடிக்குண்டு தாக்குதலில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் , உள்நாட்டு மக்கள் உட்பட 359 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 500க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தீவிரவாத தாக்குதலுக்கு இலங்கை நாட்டை சேர்ந்தவர்கள் வைத்து அரங்கேற்றியது தீவிரவாத அமைப்பு. அதே சமயம் சில இடங்களில் தற்கொலைப்படை தாக்குதலும் நடைப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த இலங்கை தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது தொடர்பாக 50க்கும் மேற்பட்டோரை கைது செய்து இலங்கை போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர். உலக நாடுகள் உதவியுடன் பல்வேறு நாடுகளில் இலங்கையில் தாக்குதல் நடத்தியது தொடர்பான விசாரணை தொடங்கியுள்ளது. இலங்கையில் நடந்த தொடர் வெடிக்குண்டு தாக்குதலில் வெளிநாட்டவர் சதி இருக்கலாம் என வெளியானதை அடுத்து 39 நாடுகளுக்கு விசா வழங்குவதை ரத்து செய்தது இலங்கை அரசு. இது குறித்து இலங்கை சுற்றுலா துறை அமைச்சர் திரு. ஜான் அமரதுங்கா கூறுகையில் நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒரு சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

குறிப்பிட்ட 39 நாடுகளுக்கு இலங்கைக்கு வந்து விசா பெற்றுக்கொள்ளும் வசதி இருக்கிறது. இருப்பினும் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு விசாவை தற்காலிகமாக நிறுத்து வைத்துள்ளோம் என்றார். இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் வெளிநாட்டின் சதி இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட 39 நாடுகளுக்கு அளிக்கப்பட்டு வந்த விசா வசதியை தவறான முறையில் பயன்படுத்துவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார். மேலும் நடப்பாண்டில் மார்ச் மாதம் வரை 7.40 லட்சம் வெளிநாட்டினர் இலங்கைக்கு வந்துள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் 4.5 லட்சம் இந்தியர்கள் இலங்கைக்கு சென்றுள்ளனர்.
நடப்பாண்டில் இந்த எண்ணிக்கை 10 லட்சமாக உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு நடந்துள்ளது . அதே சமயம் இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் சுமார் 139 பேருக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். குண்டுவெடிப்பை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் தற்கொலைப்படை தீவிரவாதிகளின் தந்தையை கைது செய்தது இலங்கை ராணுவம். மேலும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
பி.சந்தோஷ்,சேலம்.