
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள விரியூர் கிராமத்தில் சட்டத்திற்குப் புறம்பாக நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாக சங்கராபுரம் காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜா சதுர்வேதி உத்தரவின் பேரில் சங்கராபுரம் காவல் உதவி ஆய்வாளர் தனசேகர், தனிப்பிரிவு காவலர் இளந்திரையன் தலைமையிலான போலீசார் விரியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த ஜான் கென்னடி என்கின்ற ராஜா மற்றும் அந்தோணிசாமி ஆகிய இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.
முதலில் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்த நிலையில் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் சட்டத்திற்கு புறம்பாக 2 நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருந்ததும், விலை உயர்ந்த 7 லட்சம் மதிப்பிலான 5 இருசக்கர வாகனம் திருடி வைத்திருந்ததும் தெரியவந்தது, இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் இவர்கள் பல்வேறு சம்பவங்களில் ஈடுபடுபவர்களா? அல்லது வேறு ஏதேனும் சம்பவத்தில் தொடர்புடையவரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.