இலங்கையில் பெண்கள் கடவுச்சீட்டுக்கான புகைப்படம் எடுக்கும்போது நெற்றியில் பொட்டு வைப்பதை தவிர்க்க வேண்டும் என குடிவரவு குடிஅகல்வு திணைக்களம் அறிவித்துள்ளதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
கடவுச்சீட்டுக்கான புகைப்படத்தை எடுக்கும் போது முகத்தில் ஒப்பனைகளோ அல்லது வேறு எந்தவித அடையாளங்களோ மாற்றங்களோ இல்லாமல் இருக்க வேண்டும் என இலங்கை அறிவித்துள்ளது. ஆனால் இது தமிழ் பெண்களுக்கு எதிரான செயல் என கருத்துக்களும் சமூகவலைதளங்களில் எழுந்து வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து பிபிசி -யிடம் பேசியுள்ள இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் செய்தி தொடர்பாளர் கயான் மிலிந்த, சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டு 2015ஆம் ஆண்டு சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பில் சில புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, கடவுச்சீட்டுக்கான புகைப்படத்தை எடுக்கும் போது முகத்தில் ஒப்பனைகளோ அல்லது வேறு எந்தவித மாற்றங்களும் இல்லாது புகைப்படத்தை எடுக்க வேண்டும் என சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் விதிமுறைகளில் உள்ளதாக அவர் கூறினார்.
மேலும் இந்த சட்டத்தின்படி, 2015 ஆம் ஆண்டிற்கு பின்னர் எடுக்கப்பட்ட கடவுசீட்டு புகைப்படத்தில் முகத்தில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டிருந்தால், அது குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் நிராகரிக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், இது தமிழ் பெண்களை மட்டும் குறிவைத்து செய்யப்பட்டதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் பௌத்தம், கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாமிய பெண்கள் பெரும்பாலும் பொட்டு வைப்பதில்லை என்பதால் இலங்கை அரசின் இந்த திட்டம் தமிழ் பெண்களை குறிவைத்தே அமைக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.