ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் தொடங்கி, இன்றோடு 1,000வது நாட்களை கடந்துள்ளது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயன்றும், போர் நின்றபாடில்லை. அதே வேளையில், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து போர் ஆயுதங்களை வழங்கி வருவதாக ரஷ்யா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
இந்த நிலையில், அணுசக்தி இல்லாத நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்த அனுமதிக்கும் ஆணையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கையெழுத்திட்டு இருக்கிறார்.
முன்னதாக, ரஷ்யாவில் உள்ள ராணுவ இலக்குகளை தாக்க நீண்ட நேர ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைனுக்கு அனுமதி வழங்கியிருந்தார். இது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி கொடுத்தது குறித்து நேற்று ரஷ்ய அதிபர் மாளிகை, இது உலகப் போருக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை கொடுத்திருந்தது. இந்த சூழ்நிலையில் தான், அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கொடுக்கும் விதமாக புதுப்பிக்கப்பட்ட அணுசக்தி கோட்பாட்டுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒப்புதல் அளித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், புதுப்பிக்கப்பட்ட அணுசக்தி கோட்பாட்டுக்கு கையெழுத்திட்டதன் மூலம், உக்ரைனுக்கு எதிராக அணுஆயுதங்களை பயன்படுத்த முடியும் என்ற சட்டவிதிகளை ரஷ்யா உருவாக்கியிருக்கிறது. இதன் மூலம் உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்து செல்கிறது.