உலகின் பிரபலமான சமூக ஊடகமான ட்விட்டரை நம்பர் உன் கோடீசுவரரான எலான் மஸ்க் வாங்கியுள்ளார், இன்னும் ஆறு மாதங்களில் ட்விட்டரின் முழு கட்டுப்பாடும் எலான் மஸ்க் வசம் வந்துவிடும் என்றெல்லாம் செய்திகள் உலா வந்த நிலையில், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவிலிருந்து பின்வாங்கிவிடுவாரோ எலான் மஸ்க் என எண்ணத்தோன்றும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
எலான் மஸ்க்கை ட்விட்டரில் பின் தொடர்பவர்கள் பலர் போலி பயனர்கள் என்ற சர்ச்சை அவர் ட்விட்டரை வாங்கப்போவதாக அறிவித்த பொழுதே அரசல்புரசலாக அடிபட்டது. இந்நிலையில் ட்விட்டரில் மொத்தமுள்ள கணக்குகளில் 5 சதவிகித கணக்குகள் போலி என்பது தெரியவர, அதனை வாங்கும் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் நிறுத்தி வைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ட்விட்டரை வாங்குவதாகப் பேச்சு அடிபட்டபோதே கொக்ககோலா நிறுவனத்தை வாங்கி அதில் கொக்கினை சேர்க்கப் போவதாக எலான் மஸ்க் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். கடைசியில் அது நகைச்சுவைக்காகத் தான் இட்ட பதிவு என அவரே தெளிவுபடுத்தி இருந்தார். அதேபோல் மெக்டொனால் நிறுவனத்தை வாங்கி அங்குள்ள பழுதடைந்த ஐஸ் க்ரீம் இயந்திரங்களை பழுதுபார்க்க உள்ளதாக அவர் பதிவிட்டிருந்ததும் கடைசியில் விளையாட்டு என தெரியவந்தது. அதை வாங்குகிறேன் இதை வாங்குகிறேன் என கூறி கடைசியில் ஜகா வாங்கியுள்ளார் எலான் என கமெண்ட் அடித்து வருகின்றனர் இணையவாசிகள்.