இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. போராட்டத்தின் பலனாக ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். அதனைத்தொடர்ந்து இலங்கை மொரட்டுவை மேயர் வீட்டிற்கு தீவைக்கப்பட்டதோடு, கலவரத்தில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலா சடலமாக மீட்கப்பட்டார். குருநாகல்லில் உள்ள மஹிந்த ராஜபக்சேவின் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் வீடு முழுமையாக எரிந்து நாசமானது. இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதேபோல் இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சேவின் வீட்டிற்கும் தீவைக்கப்பட்டது.
ஒட்டுமொத்த இலங்கையும் கலவரக் காடாக காட்சியளிக்கும் நிலையில் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், அரசியல் நிலைத்தன்மையை ஏற்படுத்தவும் முயற்சிகள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அமைதி காக்குமாறும், வன்முறைகளை கைவிடுமாறும் இலங்கை அதிபர் கோட்டய ராஜபக்சே டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் மஹிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை என்றும், மஹிந்த ராஜபக்சே பாதுகாப்பாக இருப்பதாகவும் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.