பிரிட்டனில் பணக்கார நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக அடையாளப்படுத்தப்படும் ரிஷி சுனக், பிரதமர் போட்டியில் இருக்கும் மற்றவர்களில் இருந்து மாறுப்பட்ட கொள்கைகளை உடையவர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், பிரிட்டனின் பிரதமர் பதவிக்கான போட்டி வரை முன்னேறியது எப்படி? என்று விரிவாகப் பார்ப்போம்.
பணவீக்கமே முதல் எதிரி. இதனை கட்டுப்படுத்துவதே முதன்மை பணியாக இருக்கும். பணவீக்கம் கட்டுக்குள் வரும் வரை வரிகள் குறைப்பு கிடையாது. நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் சிறப்பானதாக இருப்பதை உறுதிச் செய்ய, எளிதில் செயல்படுத்தக் கூடிய திட்டங்களை வகுத்து வைத்துள்ளேன். இக்கூற்றுகளே பிரதமர் பதவிக்கான போட்டியில் மற்றவர்கள் மத்தியில் இருந்து ரிஷி சுனக்கை தனித்துக் காட்டியுள்ளது.
அவரைத் தவிர போட்டியில் உள்ள அனைவரின் முதன்மை வாக்குறுதியும் வரிக் குறைப்பு என்பதாகவே உள்ளது. கடந்த 2020- ஆம் ஆண்டு பிரிட்டனின் நிதியமைச்சர் பொறுப்பையேற்று ரிஷி சுனக், கரோனா பெருந்தொற்று காலத்தில் நாட்டின் பொருளாதார விவரங்களை சிறப்பாக கையாண்டதன் மூலம் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.
பிரதமர் போரிஸ் ஜான்சனின் ஆதரவாளராக அறியப்பட்ட ரிஷி சுனக்தான், இருவரின் கொள்கைகளும், செயல்பாடுகளும் ஒரே திசையில் இல்லை எனக் கூறி முதன் முதலில் பதவியில் இருந்து விலகினார். இந்த முடிவை போரிஸ் ஜான்சனின் ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் தான், பிரதமர் பதவிக்கான போட்டியில் முன்னிலை பெற்றுள்ளார் ரிஷி.
கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து பிரிட்டனுக்கு குடிபெயர்ந்த இந்திய வம்சாவளி தம்பதிக்கு கடந்த 1980- ஆம் ஆண்டு சவுத்தாம்ப்டனில் பிறந்தவர் ரிஷி சுனக். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தத்துவம், பொருளாதாரம் மற்றும் அரசியலைக் கற்றறிந்தவர். செயிண்ட்போர்ட் பல்கலைக்கழகத்தில் முதுநிலை வர்த்தக மேலாண்மையை கற்றபோது தான், இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகளான அக்ஷிதாவைச் சந்தித்தார். அதைத் தொடர்ந்து, இருவரும் மணந்துக் கொண்டனர்.
கடந்த 2015- ஆம் ஆண்டில் ரிச்மாண்ட் நாடாளுமன்ற உறுப்பினராக ரிஷி சுனக் தேர்வானார். படிப்படியாக வளர்ந்த அவர், தெரசா மே தலைமையிலான கான்சர்வேட்டிவ் அமைச்சரவையில் இளநிலை அமைச்சர் பொறுப்பை ஏற்றார். அதன் பின்னர், போரிஸ் ஜான்சன் தலைமையிலான அமைச்சரவையில் பல்வேறு நிலைகளில் பணியாற்றிய ரிஷி சுனக், நாட்டின் நிதியமைச்சராக ஆற்றிய பணியை அவரைப் பிரதமர் பதவிக்கான போட்டி வரை கொண்டு வந்திருக்கிறது.
பல்வேறு கடினமான காலகட்டங்களை கடந்து வந்த ரிஷி அடுத்தடுத்த சுற்று வாக்குப்பதிவுகளில் வெற்றிப் பெற்று பிரிட்டன் அமைச்சரவையில் தலைமைப் பொறுப்பேற்பாரா என்ற கேள்விக்கு அடுத்த சில நாட்களில் விடை கிடைக்கும்.