Skip to main content

"மீண்டும் சந்திப்போம்"... எட்டு ஆண்டுகளுக்குப் பின் மக்களிடம் உரையாற்றிய ராணி எலிசபெத்...

Published on 06/04/2020 | Edited on 06/04/2020


பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் கரோனா வைரஸ் பரவலால் முடங்கிப்போயுள்ள மக்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உரையாற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

queen elizabeth speaks to britain people amidst corona outbreak

 

உலகையே புரட்டிப் போட்டுள்ள கரோனா வைரசால் 204 நாடுகளில் சுமார் 12 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69,000-ஐ கடந்துள்ளது. 2,64,000 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.இந்த வைரஸ் பாதிப்பால் பிரிட்டனில் 47,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் 4,900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.மேலும், அந்நாட்டின் இளவரசர் சார்லஸ், பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோரையும் இந்த வைரஸ் தாக்கியது.இதனையடுத்து கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் லாக்டவுன் செய்யப்பட்டது. இந்நிலையில் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் கரோனா வைரஸ் பரவலால் முடங்கிப்போயுள்ள மக்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உரையாற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மிகவும் அரிதாகவே மக்கள் மத்தியில் பேசும் எலிசபெத், 2012-ம் ஆண்டில் தனது வைரவிழாவின்போது மக்கள் மத்தியில் உரையாற்றினார். அதன்பின் தற்போதுதான் மக்கள் முன் பேசியுள்ளார்.

கரோனா பரவல் குறித்து பேசியுள்ள ராணி, "கரோனா வைரசின் தாக்கத்தால் உலகமே மிகப்பெரிய வலியிலும், துயரத்திலும், நிதிச் சிக்கலிலும் சிக்கியுள்ளது. கரோனா வைரசுக்கு எதிரான சவாலை நாம் எவ்வாறு எதிர்கொண்டு வெற்றிபெற்றோம் என்பதை ஒவ்வொருவரும் பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் ஆண்டாக இது அமையும்.இது சவாலான நேரம் எனத் தெரிந்ததால் நான் உங்களிடம் பேசுகிறேன். நாடே பெரும் சோதனைக்கு உள்ளாகியுள்ள இந்தக் காலகட்டத்தில், மக்களும் பல்வேறு துன்பங்களை அனுபவிக்கின்றனர். தங்களது அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றங்களையும் சந்தித்துள்ளனர்.


இந்தக் கடினமான நேரத்தில் மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறேன். கரோனா வைரசால் பலர் அன்புக்குரியவர்களை இழந்திருக்கிறார்கள்.அவர்களின் வேதனையைப் புரிந்துகொள்ள முடிகிறது.இந்தச் சவாலான நேரத்தை நாம் தாங்கிக்கொள்ள வேண்டும். நல்ல காலம் திரும்பும். நமது நண்பர்களுடனும், குடும்பத்தாருடனும் நாம் மீண்டும் இணைவோம். அவர்களை மீண்டும் சந்திப்போம்.கரோனா வைரசுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெறுவோம்'' எனத் தெரிவித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்