Skip to main content

ட்வீட்டுகளால் வரலாற்று சிறப்பை இழந்த இந்திய வம்சாவளி பெண்! 

Published on 03/03/2021 | Edited on 03/03/2021

 

neera tanden

 

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் கடந்த ஜனவரி 20 ஆம் தேதி பதவியேற்றார். பதவியேற்ற அவர், பல்வேறு பொறுப்புகளுக்கு அதிகாரிகளைப் பரிந்துரைத்து வருகிறார். இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். அந்த வரிசையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீரா டாண்டனை, ஜோ பைடன் வெள்ளை மாளிகையின் பட்ஜெட் இயக்குநர் பதவிக்குப் பரிந்துரைத்திருந்தார். அதிபரின் பரிந்துரையை, அமெரிக்காவின் செனட் சபை அங்கீகரிக்க வேண்டும். இல்லையென்றால் பரிந்துரை தோல்வியில் முடியும்.

 

இந்தநிலையில் சில ஆண்டுகளுக்கு முன் நீரா டாண்டன் பதிவிட்ட ட்விட்டர் பதிவுகள், அவருக்கு எதிராகத் திரும்பியது. அந்த ட்விட்டர் பதிவுகளில் அவர், ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சியைச் சார்ந்தவர்களைக் கடுமையாக விமர்சித்திருந்தார். இதனால் செனட் சபையில் அவருக்குப் போதுமான வாக்குகள் கிடைக்காது என கூறப்பட்டு வந்தது.

 

இந்நிலையில், பட்ஜெட் இயக்குநர் பதவிக்கான பரிந்துரையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு நீரா டாண்டன், அதிபர் ஜோ பைடனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், “என்னை பட்ஜெட் இயக்குநராக்க செய்யப்பட்டுள்ள பரிந்துரை ஏற்கப்படாது எனத் தெரிந்துவிட்டது. இனியும் இந்தப் பரிந்துரை, மற்ற முக்கியமான விஷயங்களிலிருந்து உங்களைத் திசை திருப்புவதை நான் விரும்பவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

 

இதனைத் தொடர்ந்து நீரா டாண்டனின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், "மேலாண்மை மற்றும் பட்ஜெட் அலுவலக இயக்குநருக்கான பரிந்துரையிலிருந்து தனது பெயரைத் திரும்பப் பெறுமாறு நீரா டாண்டன் வைத்த கோரிக்கையை நான் ஏற்றுக்கொண்டேன்," என அறிவித்துள்ளார்

 

நீரா டாண்டன் ஒருவேளை செனட் சபையால் அங்கீகரிக்கப்பட்டிருந்தால், மேலாண்மை மற்றும் பட்ஜெட் அலுவலக இயக்குநர் பதவியை வகித்த முதல் பெண் என்ற வரலாற்றுச் சிறப்பினைப் பெற்றிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்