பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இந்திய திரைப்பட பாடலுக்கு நடனமாடியதால் அந்த பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த பள்ளியில் நடைபெற்ற மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சியில் மாணவர்கள் சிலர் இந்திய பாடலுக்கு நடனமாடினர். அவர்களுக்கு பின்னால் இருந்த எல்.இ.டி திரையில் இந்திய தேசிய கொடி காட்டப்பட்டது. இந்த காட்சிகள் வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. இதற்கு பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி பள்ளி நிர்வாகத்துக்கு, மாகாண தனியார் பள்ளி பதிவு இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் பள்ளியின் உரிமையாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காததால், அந்த பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதாக மாகாண தனியார் பள்ளி பதிவு இயக்குனரகம் அறிவித்துள்ளது. மேலும் இது குறித்து பள்ளி பதிவு இயக்குனரகம் கூறுகையில், “இந்திய கலாசாரத்தை பள்ளி விழாக்களில் ஊக்குவிப்பது, பாகிஸ்தானின் கவுரவத்தை பாதிக்கும் செயல். எந்த விதத்திலும் இதனை சகித்துக்கொள்ள முடியாது” என கூறியுள்ளது.