பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கம் கடந்த 14 ஆம் தேதி காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடத்திய தாக்குதலில் 40 இந்திய சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர். அதனை தொடர்ந்து புல்வாமா தாக்குதலுக்கு பதில் தாக்குதலாக இந்தியா பால்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்தது.
அதனை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதியில் பதட்டம் நிலவியது. தமிழகத்தை சேர்ந்த இந்திய வான்படை பைலட் அபிநந்தன் பாகிஸ்தானில் ராணுவத்தால் பிடிக்கப்பட்டு, பின்னர் இன்று அவரை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் சார்பாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் நிதி அமைச்சர் அசாத் உமர் கூறும்போது, “நாட்டை பாதுகாப்பதுதான் ராணுவத்தின் கடமை. ஆனால் அரசியல்வாதிகளின் கடமை என்பது நாட்டில் ராணுவத்தை உபயோகப்படுத்தும்படியான சூழலை ஏற்படுத்தாமல் இருப்பது. நான் கடந்த 72 மணி நேரங்களாக நடந்தவைகள் குறித்து பெருமை கொள்கிறேன். பாகிஸ்தானின் அரசியல் தலைமை ஒற்றுமையாக செயல்பட்டு தங்கள் பலத்தை காண்பித்துள்ளது. ஆனால் இந்தியாவில் அரசியல் தலைவர்கள் பிரிந்துள்ளனர். பாகிஸ்தானியர்களிடம் எந்த பிரிவும் இல்லை" என கூறினார்.