
திருவண்ணாமலை மாநகரம் மாரியம்மன் கோவில் 10வது தெருவைச் சேர்ந்தவர் ராஜா என்கிற காட்டுராஜா. 48 வயதான இவர் அதிமுக பிரமுகராக இருந்து வருகிறார். கடந்த மார்ச் 22ஆம் தேதி காட்டு ராஜாவை, ஒன்றரை கிலோ கஞ்சாவுடன் கைது செய்தனர். அதோடு கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய அவரது புல்லட்டையும் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக காவல்துறை வட்டாரத்தில் நாம் கேட்டபோது, சரித்தர பதிவேடு குற்றவாளியாக நகர காவல்நிலையத்தில் இவர் பெயர் இருந்தது. எங்கள் துறையைச் சேர்ந்த ஒரு சில அதிகாரிகளுக்கு சில லட்சங்களை தந்து சரித்தரபதிவோடு குற்றவாளி பட்டியலில் இருந்து சமீபத்தில் இவர் தன் பெயரை நீக்கியுள்ளார். இது வடக்கு மண்டல ஐ.ஐீ அஸ்ராகர்க் ஆய்வு செய்தபோது கண்டறிந்தார். அவர் டீம் நடத்திய விசாரணையில் காட்டு ராஜா கஞ்சா விற்பது, கட்டப்பஞ்சாயத்து, ரவுடிஸம், கந்துவட்டி தொழில் என பல்வேறு குற்ற சம்பவங்கள் செய்துவருவது தெரிந்து அவருக்கு ரிப்போட் தந்தனர். அதனைப்பார்த்து அதிர்ச்சியாகிவிட்டார். அத்தோடு 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை தன் தொழில்களுக்கு பயன்படுத்துவதை தெரிந்து கடுப்பாகி விட்டார். உடனே அவரை கைது செய்யச் சொல்லி உத்தரவிட்டார். அதன் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டார். காட்டு ராஜா மீது மீண்டும் சரித்திர பதிவோடு குற்றவாளி பட்டியலில் சேர்க்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது என்கிறார்கள்.
அதிமுகவினரோ, முன்னாள் அமைச்சர்கள் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ, மா.செ ராமச்சந்திரன் போன்றவர்களுடன் நெருக்கம் இருப்பதுப்போல் அடிக்கடி சமூக வலைதளங்களில் வீடியோக்களை போடுவார். பல லட்சம் மதிப்புள்ள கறுப்பு கலர் ஜீப் வாங்கி பந்தாவாக வலம் வருவார், அதனை உயர் பொறுப்பில் கண்டுகொள்ளவில்லை. இவர் மட்டுமல்ல திருவண்ணாமலை நகரத்தில் ரவுடியாக வலம் வரும் எங்கள் கட்சி கவுன்சிலர் ஒருவரின் கணவர் சரவணன், அதிமுக நிர்வாகி ரேடியோ ஆறுமுகம் என்பவரை அவரின் வீட்டுக்கே அடியாட்களுடன் சென்று மிரட்டியது தொடர்பாக சிசிடிவி காட்சிகளோடு திருவண்ணாமலை நகர காவல்நிலையத்தில் புகார் தந்தார்.
அந்த காவல்நிலையத்தில் முக்கிய அதிகாரி, ஒரே கட்சியில் இருந்துகொண்டு எதுக்கு புகார் கொடுத்து பிரச்சனையாக்காதிங்க. நான் அவரை வந்து மன்னிப்பு கேட்கச்சொல்றன், சமாதானமா போங்க என புகார் தந்த ஆறுமுகத்திடம் சொல்லி பஞ்சாயத்து பேசியுள்ளார். ஒரு ரவுடிக்காக காவல் ஆய்வாளரே சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். காரணம் அந்த சரவணன் தான், பஞ்சாயத்து பேசி பணம் வாங்கி தருபவராக இருக்கிறார் எனச்சொல்கிறார்கள். பாஜக போல் எங்கள் கட்சியும் திருவண்ணாமலையில் ரவுடிகள் இணையும் கட்சியாகிவிடும் போல் இருக்கிறது என புலம்பினார்கள்.