
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று தற்போது சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுக்குழுவில் தலைவருக்கு அதிகாரம் அளித்தல்; மாநில அரசுகளுக்கான அதிகாரத்தை பகிர்ந்தளித்தல் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராகவும், பரந்தூர் விமான நிலைய திட்டத்தை எதிர்த்தும்; டாஸ்மாக் முறைகேடு; அரசு ஊழியர்கள் போராட்டம்; இருமொழிக் கொள்கை; சாதிவாரி கணக்கெடுப்பு; பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்தும் என மொத்தம் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தேர்தல் பிரச்சார வியூக வகுப்பாளர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், ''இந்த அரங்கத்தின் பெயர் 'ராமச்சந்திரா' 1972ல் எந்த தீய சக்தியை எதிர்த்து; ஊழலை எதிர்த்து; குடும்ப ஆட்சியை எதிர்த்து எம்ஜிஆர் ஆரம்பித்தாரோ அவருடைய பெயரில் இருந்து நம்முடைய முதல் பொதுக்குழு உதயமாகி இருக்கிறது. என்ன ஒரு வரலாற்று இணைப்பு.
எங்களுடைய அரசியல் 'ஒர்க் பிரம் ஹாம்' அல்ல, உங்களுக்கெல்லாம் ரிட்டையர்மென்ட் கொடுக்க தான் ரெடியாகி கொண்டிருக்கிறோம். உங்களுடைய எழுபது வருட அரசியல்; உங்களுடைய ஓட்டு மொத்த மன்னராட்சி; குடும்ப ஆட்சி; 40 வருட வேட்பாளர்; இந்த அமைச்சர் பெரிய ஆளு; இந்த அமைச்சருக்கு நிறைய செல்வாக்கு; இந்த அமைச்சர் நிறைய காசு வச்சிருக்கார் என இந்த ஊழல் அரசையும், அமைச்சர்களையும், இந்த ஊழல் குடும்பத்தையும் தூக்கி எறிவதற்கு கட்சியின் உள்கட்டமைப்பை பொறுமையாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார். கூடிய விரைவில் பொதுச்செயலாளர் அறிவிப்பார். அண்ணா யுனிவர்சிட்டியில் ஒரு பாலியல் பிரச்சனை உருவானது. இங்கிருக்கும் ஆளும் கட்சி அதை மூடி மறைக்கப் பார்த்தார்கள். விஜய் ஸ்டேட்மெண்ட் வந்த பிறகுதான் தமிழகம் முழுவதும் 'எங்கே சார்?' என்று குரல்கள் எழுந்தது. ஒவ்வொரு பிரச்சனைக்கும் குரல் கொடுக்கக்கூடிய இயக்கம் தவெக'' என்றார்.

பி.கேவை நாம் அழைத்து வந்த உடனே திமுக நமக்கு எதிராக ஒரு பெரிய கட்டமைப்பை உருவாக்கினார்கள். பீகார், இந்தி என கட்டமைப்பை உருவாக்கினார்கள். இப்பொழுது திமுக என்ன செய்கிறார்கள் என்றால் 'பென்' என்ற ஒரு பெரிய நிறுவனம் இருக்கிறது. தன்னுடைய மருமகனை வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதோடு சேர்ந்து ஐ பேக் என்ற நிறுவனத்துடன் சைன் போட்டு இருக்கிறார்கள். பொய் பிரச்சாரத்திற்கு செட் செய்யப்பட்டவர் தான் தமிழக பாஜக தலைவர். திடீரென ஒரு ஆடு வந்து சம்பந்தமே இல்லாம எங்க தலைவரை பார்த்து, அவரது தொழிலை வைத்து பேசுகிறார். பெண்ணை பற்றி தரக்குறைவாக பேசும் ஒருவரை தலைவராக வைத்திருக்கும்போதே முடிவாகி விட்டது பாஜக எந்த அளவிற்கு இருக்கிறது என்று.
தமிழிசை, வானதி அக்கா எல்லாருக்கும் தெரியும் அந்த தலைவரைப் பற்றி. திமுகவிற்கு எதிராக அண்ணா யுனிவர்சிட்டி பிரச்சனைக்கு மக்கள் எல்லாம் குரல் கொடுக்கும் பொழுது திடீரென ஒருவர் சட்டையை கழட்டி சாட்டையால் அடித்துக் கொள்கிறார். என்னடா அரசியல் பண்றீங்க. யாருக்காக இந்த அரசியல். பாவம் மோடி டெல்லியில் உட்கார்ந்து கொண்டு நமக்காக ஒரு பையன் சாட்டையில் அடித்துக் கொள்கிறான், நமக்காக கத்தி கொண்டிருக்கிறான், வேலை செய்து கொண்டிருக்கிறான் என நினைக்கும் போது வியூக வகுப்பாளர்கள் பாஜக தலைவரையே கரெக்ட் செய்து விட்டார்கள். இனி வரும் காலங்களில் எங்கள் தலைவரையும், கட்சியையும் தொட்டால் உங்கள் உண்மையை தூக்கி எறிவோம் மக்கள் முன்'' என்றார்.