
சென்னை மண்ணடி பகுதியைச் சேர்ந்த அகரம் ஜாவித் அதே பகுதியில் உள்ள துணிக்கடை ஒன்றியில் வேலை பார்த்து வந்துள்ளார். 33 வயதாகும் அக்ரம் ஜாவித்திற்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரண்டரை வயதில் பெண் குழந்தை ஒன்று இருந்துள்ளது.
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு ஜாவித் வீட்டில் உள்ளவர்கள் ரம்ஜான் தொழுகைக்கு சென்றிருந்தனர். அந்த நேரத்தில் அக்ரம் ஜாவித் தனது பெண்குழந்தையுடன் வீட்டில் உள்ள ஒரு அறையில் தனியாக விளையாடிக் கொண்டிருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து தொழுகை முடிந்து வந்த மனைவியிடம் குழந்தை திடீரென மயங்கி விழுந்துவிட்டதாக அக்ரம் ஜாவத் கூறியிருக்கிறார். இதனால் பதற்றமடைந்த மனைவி, அருகே உள்ள மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றிருக்கிறார். அங்குப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இருப்பினும் குழந்தை எப்படி உயிரிழந்தது என்று தெரியாமல் அக்ரம் ஜாவித்தின் மனைவி மற்றும் உறவினர்கள் சந்தேகத்துடன் கதறி அழுதுள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில், குழந்தை கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால் விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீசார், குழந்தையுடன் இருந்த தந்தை அக்ரம் ஜாவித்தை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.
முதலில் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்த அக்ரம் ஜாவத்திடம் போலீஸுக்கெ உரித்தான பாணியில் விசாரணையை தொடங்கிய பிறகு, தான் தான் பெண் குழந்தையை கொலை செய்தேன் என்று ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால், அதற்கு அவர் கூறிய காரணம் தான் போலீசாரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அக்ரம் ஜாவித் தனது மனைவியிடம், ‘உன்னை யாரும் காதலித்து இருக்கிறார்களா?’ என்று கேட்டிருக்கிறார். மனைவியோ, ‘ஒருவர் என்னைக் காதலித்தார்..’ என்று கூற, அடுத்த நொடியோ ஆள் எப்படி இருப்பார்..? கருப்பாக இருப்பாரா? அல்லது சிவப்பாக இருப்பாரா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு மனைவியின் சிவப்பாகத்தான் இருப்பார் என்று கூற, அன்றில் இருந்தே அக்ரம் ஜாவத்திற்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும் நானும் கருப்பு நீயும் கருப்பு ஆனால், தமக்கு பிறந்த பெண் குழந்தை மட்டும் எப்படி சிவப்பாக இருக்கிறது என்று மனைவியிடம் தகராறு செய்திருக்கிறார்.
நாளாக நாளாக இந்த சந்தேகம் அக்ரம் ஜாவித்திற்கு முற்றியதைத் தொடர்ந்து இந்த குழந்தை தனக்கு பிறக்க வில்லை என்று எண்ணிய அவர், குழந்தையை கொலை செய்யத் திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி சந்தர்பத்திற்காக காத்திருந்த அக்ரம் ஜாவித், மனைவி மற்றும் வீட்டில் இருந்த உறவினர்கள் தொழுகைக்குச் சென்ற போது பெண்குழந்தையின் கழுத்தை கயிற்றால் நெறித்து கொடூரமாக கொலை செய்தது அம்பலமானது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியில் சிறையில் அடைத்துள்ளனர்.
குழந்தை சிவப்பாக இருப்பதை காரணம் காட்டி பெற்ற குழந்தையை தந்தையே கொடூரமாக கொலை செய்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.