/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1_474.jpg)
ஹாலிவுட் சினிமா மூலம் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு தெரிந்த ஒன்று டைட்டானிக் கப்பல் மூழ்கிய விவகாரம். 1912 ஆம் ஆண்டு பிரிட்டனில் இருந்து அமெரிக்கா நோக்கிச் சென்று கொண்டிருந்த டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதி அட்லாண்டிக் கடலில் மூழ்கியது.
கடலில் மூழ்கிய கப்பல் அமெரிக்காவில் உள்ள நியூ ஃபவுண்ட்லாந்த் தீவுக்கு அருகே சுமார் 740 கிமீ தொலைவில் மூழ்கியிருப்பது 1985 ஆம் வருடம் கண்டறியப்பட்டது. கப்பலை தரைக்கு கொண்டு வர முடியாததால் ஆய்வாளர்களும், பழம் பொருட்களை சேகரிப்பவர்களும் தங்களது தேவைக்கேற்ப கடலுக்குள் சென்று கப்பலை பார்வையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் டைட்டானிக் கப்பலை பார்வையிடுவதற்காக ஓசன்கேட் என்ற நிறுவனம் நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைத்தது. இக்கப்பல் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்வதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. லாரி அளவிலான இந்த கப்பலில் 5 பேர் வரை பயணிக்க முடியும். இக்கப்பலில் 4 நாட்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் இருப்பு வைக்கப்பட்டு இருக்கும்.
டைட்டானிக் கப்பலை நேரில் பார்க்கும் சுற்றுலா 8 நாட்கள் பயணத்தை அடிப்படையாக கொண்டது. இந்த சுற்றுலாவுக்கு கட்டணமாக 2 கோடி ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஓஷன்கேட் நீர்மூழ்கிக் கப்பல் டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்திற்கு கொண்டுவரப்பட்டது. வியாழன் காலை 9 மணியளவில் நீர்மூழ்கிக் கப்பல் கடலில் இறக்கப்பட்டது. அக்கப்பலில் ஓஷன்கேட் நிறுவனத்தின் நிறுவனரும், நீர்மூழ்கிக் கப்பலின் மாலுமியும், பிரிட்டன் தொழிலதிபர் ஒருவரும், பாகிஸ்தான் தொழிலதிபர் ஒருவரும் அவரது மகனும் என மொத்தம் 5 பேர் பயணித்துள்ளனர்.
நீர்மூழ்கிக் கப்பல் கடலில் இறக்கப்பட்ட ஒரு மணி நேரம் 45 நிமிடங்களில் நீர்மூழ்கிக் கப்பலின் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கப்பல் மாலை 6.10 மணியளவில் கடலின் மேற்பரப்புக்கு வருவதாக இருந்தது.ஆனால் அந்த நேரத்திற்குள் கப்பல் திரும்பவில்லை. இதனைத் தொடர்ந்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் அங்கு வந்த கனடா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த மீட்புக் குழுவினர் கப்பலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
கப்பல் மூழ்கிய பகுதி மிக ஆழமான பகுதி எனவும் வானிலை மிக மோசமாக இருப்பதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவ்வளவு ஆழத்தில் இருக்கும் கப்பலை மீட்க தேவையான உபகரணங்கள் இருநாடுகளிடமும் இல்லை எனக் கூறப்படுகிறது. இருநாட்டு மீட்புக் குழுவினரும் மோசமான வானிலையிலும், கப்பலில் உள்ளவர்களுக்கான ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஆகியவற்றை கருத்தில் கொண்டு குறைவான கால அவகாசத்துடனும் போராடி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)