கடந்த 14-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய விமானப்படையைச் சேர்ந்த போர் விமானங்கள் பால்கோட் என்ற இடத்தில் நுழைந்து பயங்கரவாதிகள் முகாம் மீது இன்று தாக்குதல் நடத்தியது. இன்று அதிகாலை 3.30 மணிக்கு எல்லை தாண்டிச்சென்று சுமார் 1000 கிலோ வெடிகுண்டை பயங்கரவாதிகள் முகாம் மீது வீசி அவை முற்றிலும் அழிக்கப்பட்டது.
மேலும் இதில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் முக்கிய கமாண்டர்களுள் ஒருவரான யூசுப் அசார் கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிலும் உயர்மட்ட குழு ஆலோசனை நடைபெற்றது.
பாகிஸ்தானில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் நடந்து முடிந்த பின் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெமூத் குரேஷி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், "பாலாகோட் பகுதியில் இந்தியா அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதல் நடந்த இடங்களுக்கு சர்வதேச ஊடகங்களை பாகிஸ்தான் அழைத்துச் செல்ல உள்ளது. இதற்காக ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் உள்ளன. ஆனால் இப்போது வானிலை மோசமாக உள்ளதால், விமானங்களால் பறக்க முடியாது. எனவே வானிலை சரியானவுடன் ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்படும். பாகிஸ்தானைத் தனிமைப்படுத்த இந்தியா காணும் கனவு எப்போதும் பலிக்காது. இந்தியாவின் பதிலடி நாங்கள் எதிர்பார்த்ததுதான். ஏனென்றால் மும்பை தாக்குதலுக்குப் பிறகு இந்தியா இதேபோலத்தான் நடந்துகொண்டது" என கூறினார்.