Skip to main content

“சமூக நீதியை நிலைநிறுத்த இந்த முடிவு மிகவும் சிறப்பானது” - ராமதாஸ்

Published on 30/04/2025 | Edited on 30/04/2025

 

Ramadoss said This decision is very good for upholding social justice

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு தீர்மானித்திருப்பது சிறப்பானது என ராமதாஸ் வரவேற்றுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் அடுத்து நடைபெறவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்தியாவில் சமூகநீதியை நிலை நிறுத்த வகை செய்யும் இந்த முடிவு  மிகவும் சிறப்பானது.

தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். இதற்காக 1998-ஆம் ஆண்டு முதல் பாட்டாளி மக்கள் கட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாமகவின்  கோரிக்கையை  ஏற்று  2001-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த அன்றைய உள்துறை அமைச்சர் அத்வானி ஒப்புக்கொண்ட நிலையில், குஜராத் நிலநடுக்கம் காரணமாக அது சாத்தியமில்லாமல் போனது.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி 24.10.2008-ஆம் நாள் அன்றைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலிடம் பா.ம.கவைச் சேர்ந்த அன்றைய மத்திய அமைச்சர் அன்புமணி இராமதாஸ் 140-க்கும் மேற்பட்ட ஓபிசி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துப் பெறப்பட்ட கோரிக்கை மனுவை அளித்தார். அதனடிப்படையில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ஒப்புக்கொண்ட மன்மோகன்சிங் அரசு, அதன்பின் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு  சமூக, பொருளாதார, கல்வி, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி அதன் முடிவை வெளியிடவில்லை.

2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி  மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று இன்றைய பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம்  நான் நேரில் வலியுறுத்தினேன். மூன்று முறை கடிதம் எழுதினேன். மக்களவையிலும், மாநிலங்களவையிலும்  அன்புமணி ராமதாஸ் பலமுறை வலியுறுத்தியிருந்தார்.

பா.ம.க.வின்  முயற்சியால் கடந்த மூன்று  முறை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது கிட்டத்தட்ட சாத்தியமாகி கடைசி நேரத்தில் கை நழுவிய நிலையில், இப்போது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது பாட்டாளி மக்கள் கட்சியின் 30 ஆண்டுகளுக்கும் மேலான முயற்சிக்கு கிடைத்த பலன் ஆகும்.  இதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு பாமக சார்பில் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை எவ்வளவு விரைவாக தொடங்க முடியுமோ, அவ்வளவு விரைவாக மத்திய அரசு தொடங்க வேண்டும். அதன் மூலம் அனைவருக்கும் முழுமையான சமூகநீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அதேநேரத்தில் மத்திய அரசு நடத்தும் கணக்கெடுப்பு மேலோட்டமான ஒன்றாகத் தான் இருக்கும் என்பதாலும், தமிழ்நாட்டில்  உள் இட ஒதுக்கீடு வழங்க கூடுதல்  புள்ளிவிவரங்கள் தேவை என்பதாலும்  தமிழக அரசு  2008-ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின் கீழ்  மக்களின் சாதி, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிய  தனியாக சாதிவாரி சர்வே(Caste Survey) எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்