Skip to main content

“93 ஆண்டுகளுக்குப் பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை வரவேற்கிறேன்” - இபிஎஸ்

Published on 30/04/2025 | Edited on 30/04/2025

 

EPS welcome the conduct of a caste-wise census

பிரதமர் மோடி தலைமையில் இன்று (30-04-25) அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரயில்வே துறை அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், பல்வேறு அரசியல் கட்சிகளின் கோரிக்கை உள்ளிட்டவை குறித்து கருத்தில் கொண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மத்திய அரசின் இந்த முடிவுக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வரவேற்றுள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘தமிழ்நாடு மக்கள் பல ஆண்டுகளாக மத்திய அரசிடம் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். ஏற்கனவே ஜெயலலிதாவின் அரசு இருக்கும்பொழுது, தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு வந்த திமுக அரசு அதை கைவிட்டுவிட்டது.

தற்போது மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போதே ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்று அறிவித்திருப்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். சுமார் 93 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை மனதார வரவேற்கிறேன். ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் அறிவித்த பிரதமர் மோடிக்கு அதிமுக சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்