அமெரிக்காவில் அதிபர் தேர்தலானது வரும் நவம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக்கட்சி சார்பில் ஜோ பைடன் போட்டியிட இருக்கிறார். தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாத காலமே இருப்பதால் தேர்தல் பிரச்சாரங்கள் இப்போதே சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளன. இரு கட்சியைச் சேர்ந்தவர்களும் மாறிமாறி ஒருவர் மேல் ஒருவர் குற்றச்சாட்டை வைத்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் பின்லேடனின் மருமகள் நூர் பின் லேடின் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிற்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க மக்களுக்கு ஒரு வேண்டுகோளும் விடுத்துள்ளார்.
அதில் அவர், "ஒபாமா, ஜோ பைடன் காலத்தில் தான் தீவிரவாதம் ஐரோப்பாவிற்குள் நுழைந்தது. வெளிநாட்டு பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்களில் இருந்து அமெரிக்காவையும், எங்களையும் ட்ரம்ப் காப்பற்றியுள்ளார். அவர்களுக்கு எந்த வாய்ப்பும் தராமல் அதை வேரிலேயே கிள்ளி எறிந்துவிட்டார். 2015ல் அவர் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தருணத்தில் இருந்தே நான் அவரது தீவிர ஆதரவாளராக மாறிவிட்டேன். அவரது துணிச்சலான முடிவுகளை நான் பாராட்டுகிறேன். அவரது அனைத்து செயல்பாடுகளையுமே நான் தூரத்தில் இருந்து கவனித்தும் வருகிறேன். இந்த முறை ஜோ பைடன் வென்றால் மீண்டும் ஒரு 9/11 தாக்குதல் நடைபெறலாம். எனவே ட்ரம்ப் மீண்டும் அதிபர் ஆக வேண்டும்" எனக் கூறியுள்ளார்.