உலகின் மிகக் கடுமையான போதைப்பொருள் எதிர்ப்பு சட்டங்கள் சிங்கப்பூரில் கடைபிடிக்கப்படுகின்றன. சிங்கப்பூர் சட்டம் போதைப்பொருள் கடத்தலுக்கு மரண தண்டனையை கட்டாயமாக்குகிறது.
இந்நிலையில் சிங்கப்பூரில் கஞ்சா கடத்தல் வழக்கில் சிறையிலிருந்த தமிழர் ஒருவருக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டுள்ளார். கடந்த 2013ம் ஆண்டு மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு ஒரு கிலோ கஞ்சாவை விநியோகம் செய்வதற்கு போக்குவரத்துக்கான சதியில் ஈடுபட்டதாக தமிழரான தங்கராஜ் சுப்பையா என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இதற்காக தங்கராஜ் சுப்பையாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த 9 ஆண்டுகளாக சிறையிலிருந்த அவர் இன்று தூக்கிலிடப்பட்டு தண்டனையானது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாகவே தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன் தங்கராசுவின் குடும்பத்தினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சிங்கப்பூர் ஜனாதிபதிக்கு கடைசி நிமிட கருணை மனு கடிதங்களை வழங்கினர். ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்படாத சூழலில் அவர் தூக்கிலிடப்பட்டுள்ளார்.