ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு முன்னாள் அதிபர் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில், இத்தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட உள்ளார் என்பது முன்னரே உறுதிசெய்யப்பட்டது. மேலும், அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் போட்டியிட உள்ளார். இந்நிலையில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு தமிழக வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக கட்சியின் இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள, ஜோ பிடென் ஆதரவாளரான ஒபாமா, "துணை அதிபரைத் தேர்ந்தெடுப்பது ஒரு அதிபரின் முதல் முக்கிய முடிவு. ஓவல் அலுவலகத்தில் இருக்கும்போது, நீங்கள் செய்யும் ஒரு தேர்வு முழு நாட்டின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கலாம். அந்த தருணங்களில் சரியான தீர்வையும், ஆலோசனையும் வழங்குபவர் உங்கள் அருகில் தேவை" எனத் தெரிவித்துள்ளார்.