மியான்மர் நாட்டில் இராணுவப் புரட்சி ஏற்பட்டு, ஆங் சான் சூகி உள்ளிட்டோர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்த நாட்டில் ஒரு வருடத்திற்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவ ஆட்சிக்கு எதிராக அந்த நாட்டில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. ஜனநாயக ஆட்சியை வலியுறுத்தியும், கைது செய்யப்பட்ட ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்களை விடுவிக்குமாறும் அங்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இப்போராட்டத்தில் கலந்துகொள்ள முயன்ற உயர்நிலை கல்வி படிக்கும் பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே மியான்மரில் சமூகவலைதளங்கள் முடக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அங்கு நாடு முழுவதும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தற்போது மியான்மர் இராணுவம், போராட்டங்களை ஒடுக்க புதிய சட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்மூலம் போராட்டம் நடத்துபவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் போராட்டம் நடத்துபவர்களுக்கு, அந்தச் சட்டத்தின்படி அபராதம் விதிக்கவும் முடியும். மேலும் மக்கள் போராட்டத்தை ஒடுக்கும்விதமாக மியான்மர் நாட்டின் சாலைகளில் இராணுவ வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.