பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி ஜூன் 20 முதல் ஜூன் 23 வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மோடி, பின் ஜூன் 24 மற்றும் ஜூன் 25 ஆகிய தேதிகளில் எகிப்து நாட்டிற்குச் செல்கிறார்.
அமெரிக்க பயணத்திட்டத்தின்படி இன்று அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐநா தலைமையகத்தில் நடைபெறும் சர்வதேச யோகா கொண்டாட்டத்தில் பங்கேற்க உள்ளார். 22 ஆம் தேதி வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து இரு தரப்பு உறவு குறித்தும் விவாதிக்க உள்ளார். அன்றைய தினமே அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் உரையாற்றுகிறார். மேலும், அதிபர் ஜோ பைடனும், அவரது மனைவி ஜில் பைடனும் பிரதமர் மோடிக்கு இரவு விருந்து அளிக்க உள்ளனர். ஜூன் 23 இல் அமெரிக்க துணை குடியரசுத் தலைவர் கமலா ஹாரிஸ், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளங்கன் ஆகியோர் இணைந்து அளிக்கும் மதிய விருந்திலும் பங்கேற்க உள்ளார்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் 75 அமெரிக்க எம்.பிக்கள் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில், இந்தியாவில் ஜனநாயக நெறிமுறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து மோடி உடனான சந்திப்பின் போது கேள்வி எழுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் மோடி ஆட்சியில் மத சகிப்புத்தன்மையின்மை, பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்படுதல், சமூக குழுக்கள் குறிவைக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்து கடிதம் எழுதி உள்ளனர். இந்த பிரச்சனைகள் குறித்து முழு அளவில் விவாதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர். மேலும், மோடியின் அமெரிக்க நாடாளுமன்ற உரையை இரண்டு எம்.பிக்கள் புறக்கணிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.