கரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகெங்கும் பல நாடுகளில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. பல மாதங்களாக நீடித்து வந்த இம்முடக்கம் தற்போது மெல்ல விலக்கப்பட்டு வருகிறது. பொதுமுடக்கத்தின் காரணமாக மூடப்பட்டிருந்த வழிபாட்டுக் கூடங்கள், விளையாட்டு மைதானங்கள், உடற்பயிற்சி மையங்கள் என அனைத்தும் ஒவ்வொன்றாக திறக்கப்படுகின்றன. அந்த வகையில் வாட்டிகன் நகரில் அமலில் இருந்த பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டுள்ளதால் தற்போது அங்கு கூட்டுப் பிரார்த்தனைகள் தொடங்கியுள்ளது. அதில் பங்கேற்க வந்திருந்த போப் ஆண்டவர் பிரான்சிஸ் முகக்கவசம் அணிந்து வந்து, கிருமிநாசினி கொண்டு கையை சுத்தம் செய்துவிட்டு பிரார்த்தனையில் கலந்து கொண்டார்.
மேலும் அப்பிரார்த்தனையின்போது பேசுகையில், "உடல்நல ஆரோக்கியம் என்பது தனிப்பட்ட நபரின் நன்மை அல்ல, அது ஒரு பொதுவான சமூக நன்மை. இது தான் கரோனா நமக்கு கற்றுக்கொடுத்த பாடம். அனைவரது ஆரோக்கியத்தையும் கவனித்து கொள்வதில்தான் ஆரோக்கியமான சமூகம் அமையும்" என்றார்.