சுவாச மண்டலத்தில் கோளாறுகளை ஏற்படுத்தி, கடும் காய்ச்சலை ஏற்படுத்தி மனித உயிர்களை பறிக்கக்கூடிய ஆபத்து கொண்ட கரோனா வைரஸ் உலகம் முழுவதும் 23 நாடுகளில் பரவியுள்ளது. சுமார் 17,000 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வரும் சூழலில், 425 க்கும் மேற்பட்டோர் இதனால் பலியாகியுள்ளனர்.

இந்த கரோனா வைரஸ் சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் இருந்து பரவ ஆரம்பித்து, தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. வைரஸ் பரவலை தடுக்க வுஹான் நகரம் லாக்டவுன் செய்யப்பட்டது. சீனாவின் மற்ற பகுதிகளோடு வுஹான் நகருக்கு இருந்த போக்குவரத்து தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. இதனையடுத்து அங்குள்ள மக்கள் உணவு, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காகே சிரமப்படும் சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில், வுஹான் நகரம் ராணுவத்தின் கண்காணிப்பில் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அந்நாட்டு ஊடக செய்தியில், "சீனாவில் கரோனா வைரஸ் பரவிய வுஹான் நகரம் தற்போது சீன ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மக்களுக்கான அடிப்படைப் பொருட்கள் கிடைப்பதற்கான வேலையில் ராணுவம் இறங்கியுள்ளது. மேலும் , 260 ராணுவ உயர் அதிகாரிகளுடன் 130 லாரிகள் வுஹான் நகரை அடைந்துள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.