வனப்பகுதி வழியே சென்ற கார் ஒன்றின் மீது யானை அமர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தாய்லாந்து நாட்டில் காவோ யாய் தேசிய பூங்கா வழியாக செல்லும் சாலையில் ஓட்டுநர் ஒருவர் தனது காரில் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த காரை யானை ஒன்று வழிமறித்துள்ளது. டியூவா என்ற அந்த 35 வயது ஆண் யானை, சிறிது நேரம் காரை நகர விடாமல் மறித்து நின்றுள்ளது. பின்னர் காரின் மீது ஏற அந்த யானை முயன்றுள்ளது. இதனால் பீதியடைந்த அந்த ஓட்டுநர் தனது காரை நகர்த்த முயற்சி செய்துள்ளார். ஆனால் யானை தனது முழு உடலையும் காரின் மீது வைத்து அதன் மேல் ஏறி அமர்ந்துள்ளது.
காரின் பின்புற ஜன்னல், மேற்கூரை மற்றும் நடுப்பகுதி ஆகியவை யானையின் எடை தாங்காமல் நசுங்க ஆரம்பித்துள்ளன. காரின் மேல் யானை இருக்கும் போது சட்டென சுதாரித்த ஓட்டுநர் பதறியடித்தபடி அங்கிருந்த தனது காரை எடுத்து சென்றுள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, சுற்றுலாவாசிகள் தங்களது கார்களை யானைகளிடம் இருந்து 30 மீட்டர் தொலைவிலேயே நிறுத்தி விடுங்கள் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.