இன்றைய தேதியில் உலகம் முழுவதும் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் அதன் மூலம் ஏற்படும் பிளாஸ்டிக் கழிவு. இதனை கட்டுப்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக சப்பாத்திக் கள்ளியிலிருந்து இயற்கைக்கு எவ்வித தீங்கும் விளைவிக்காத பிளாஸ்டிக் தயாரிக்கும் முறையை மெக்சிகோவை சேர்ந்த பெண் ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்துள்ளார்.
தற்போது பயன்படுத்தும் மக்காத பிளாஸ்டிக்குக்கு மாற்று தயாரிப்பான இது, மண்ணில் போட்டால் 1 மாதத்தில் முழுவதும் மட்கிவிடும் குணம் உடையது. இயற்கையான மூலப் பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த பிளாஸ்டிக்கை மனிதர்களோ அல்லது மற்ற உயிரினங்களோ சாப்பிட்டாலும் ஒன்றும் ஆகாது.
சொந்தமாக இந்த பிளாஸ்டிக்கை தயாரித்து வரும் இவர், சப்பாத்திக்கள்ளியில் இருந்து பிளாஸ்டிக்கை எடுக்க 10 நாட்கள் வரை ஆவதாகவும், அரசு இதற்கான தொழிற்சாலைகளை வைத்தால் இதனை எளிதில் தயாரிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இதன் மூலம் வறண்ட பகுதிகளில் உள்ள மக்கள் கூட இந்த செடியை பயிரிட்டு விவசாயமும் செய்யலாம் எனவும் தெரிவிக்கிறார்.