மஹிந்திரா குழுமத்தின் கிளை நிறுவனமான இத்தாலியைச் சேர்ந்த பினின்ஃபரைனா (Pininfarina) அதிவேக மின்சார காரை 2019 ஜெனீவா மோட்டார் கண்காட்சியில் முதல் முறையாக அறிமுகம் செய்துள்ளது. இந்த கார் வரும் 2020-ம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிவேக காருக்கு அந்நிறுவனம் பட்டிஸ்டா என்று பெயரிட்டுள்ளது.
பட்டிஸ்டா கார் 0.2 விநாடிகளில் 100 கி.மீ தூரத்தை கடக்கக்கூடிய திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஃபார்முலா 1 கார்பந்தயத்தில் பயன்படுத்தும் கார்களைவிட அதிகமான வேகம் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டிஸ்டா காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 450 கி.மீ வரை பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019, ஜெனீவா மோட்டார் கண்காட்சியில் இது தொடர்பாக பேசிய பினின்ஃபரைனா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, இத்தாலியில் 150 பட்டிஸ்டா கார்கள் தயாரிக்கப்பட்டு ஆசியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுமெனத் தெரிவித்துள்ளார்.
இத்தாலி நிறுவனமான பினின்ஃபரைனாவை 2015-ம் ஆண்டு, இந்திய நிறுவனமான மஹிந்திரா குழுமம் 50 மில்லியன் யூரோகளை கொடுத்து வாங்கி தனது கிளை நிறுவனமாக மாற்றியது குறிப்பிடத்தக்கது.