பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அந்தநாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இந்நிலையில், செர்பியாவுக்கான பாகிஸ்தான் தூதரகம், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை விமர்சித்து பதிவு ஒன்றை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செர்பியாவுக்கான பாகிஸ்தான் தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில், "பணவீக்கம் முந்தைய சாதனைகளை முறியடித்துள்ள நிலையில், அரசு அதிகாரிகளான நாங்கள் எவ்வளவு காலம் அமைதியாக இருப்போம் என்றும், மூன்று மாதங்களாக சம்பளம் பெறாமல் எவ்வளவு காலம் உங்களுக்காக உழைப்போம் என்றும் எதிர்பார்க்கிறீர்கள் இம்ரான் கான் அவர்களே?. கட்டணம் செலுத்தாததால் எங்கள் குழந்தைகள் பள்ளியைவிட்டு வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதுதான் நயா பாகிஸ்தானா?" என பதிவிடப்பட்டிருந்தது.
அதோடு இம்ரான் கான் பேச்சை கிண்டல் செய்யும் விதமாக வீடியோவும் வெளியிடப்பட்டிருந்ததோடு, இன்னொரு ட்வீட்டில், “மன்னித்துவிடுங்கள் இம்ரான் கான், எனக்கு வேறு வழி தெரியவில்லை” என பதிவிடப்பட்டிருந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தப் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்தப் பதிவுகளை வெளியிட்ட செர்பியாவுக்கான பாகிஸ்தான் தூதரகத்தின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக விசாரணை நடைபெற்றுவருவதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.