பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக குவைத் நாட்டிற்குச் சென்றுள்ளார். அதன்படி முதல் நாளான நேற்று (21.12.2024) பிரதமர் மோடிக்கு அரசு சார்பிலும், இந்தியர்கள் சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த பயணத்தின் இரண்டாவது நாளான இன்று (22.12.2024) அந்நாட்டின் இளவரசரைச் சந்தித்து பேசினார். அப்போது குவைத் நாட்டின் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு வழங்கப்படும் உயர்ந்த விருதான, ‘ஆப் முபாரக் அல் கபீர்’ விருது வழங்கப்பட்டது.
இதன் மூலம் பிரதமர் மோடிக்குக் கிடைத்த 20வது சர்வதேச விருது இதுவாகும். முன்னதாக 19 நாடுகள் சார்பில் பிரதமர் மோடிக்கு சர்வதேச விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் இந்தியா- குவைத் இடையிலான இருதரப்பு உறவை வலுப்படுத்தியதற்காக இந்த விருது வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெற்ற அமெரிக்க அதிபர்களான பில் கிளின்டன் மற்றும் ஜார்ஜ் புஷ், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் உலகத் தலைவர்களும் பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.
மேலும் இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “குவைத்தின் உயரதிகாரியான ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல் சபாஹ் அவர்களால் முபாரக் அல்-கபீர் ஆர்டர் விருதை பெற்றதில் நான் பெருமைப்படுகிறேன். இந்த கவுரவத்தை இந்திய மக்களுக்கும், இந்தியாவுக்கும் குவைத்துக்கும் இடையிலான வலுவான நட்புறவுக்கும் அர்ப்பணிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.